AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..

முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல செயற்கை நுண்ணறிவு ‘Deepfake’ வீடியோக்கள் ஃபேஸ்புக் மட்டுமின்றி, பிற சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Sep 2026 20:19 PM IST

செப்டமபர் 2, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘Deepfake’ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வழக்கமான சைபர் கண்காணிப்பின்போது, முதலமைச்சர் விஜய்யை போன்று உருவகப்படுத்தி, இந்தி ஆடியோவுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ‘Deepfake’ வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பரவி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு – முதல்வர் விஜய்யின் டீப்ஃபேக் வீடியோ:

அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இந்த வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பொதுமக்கள் ஏதேனும் நிதியுதவி தேவைப்பட்டால் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய மோசடி வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 1-ம் தேதி சைபர் கிரைம் போலீசார் சார்பில் சிறப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அதே நாளில் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க: சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!

மெட்டா நிறுவனத்திடம் சைபர் கிரைம் கோரிக்கை:

தொடர்ந்து, போலி ஃபேஸ்புக் கணக்கு மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகளைப் பெற ‘மெட்டா’ நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அந்த போலி வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல செயற்கை நுண்ணறிவு ‘Deepfake’ வீடியோக்கள் ஃபேஸ்புக் மட்டுமின்றி, பிற சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்:

இந்த மோசடி வீடியோக்களை உருவாக்கி பரப்பியவர்களை அடையாளம் காணவும், போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் இருந்து விரைவாக நீக்கப்படுவதை உறுதி செய்யவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: சினிமா ஆசை காட்டி லீலை? இளம்பெண்ணை சீரழிக்க பார்த்த விநியோகஸ்தர்.. சென்னை லாட்ஜில் நடந்த கொடூரம்!

இதுபோன்ற போலி வீடியோக்களில் இடம்பெறும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புகொள்ளவோ, அதில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ கூடாது என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இவை உண்மையான வீடியோக்கள் அல்ல என்றும், மக்களை ஏமாற்றும் நோக்கில் மோசடி கும்பல்களால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘Deepfake’ வீடியோக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us