விலையேற்றத்திற்கு செக்!.. ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காய விற்பனை தொடக்கம்..
Onion sale ration shops: வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள 8,739 ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்.
சென்னை, செப்.03: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடச் சமையலுக்குத் தேவையான வெங்காயத்தைக் வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தது ஆகிய காரணங்களால் சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டது. பொதுமக்களின் இந்த நிதிச் சுமையைக் குறைக்கவும், திறந்தவெளியில் நிலவும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசுத் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியப் பகுதியாக, அரசு ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக குறைந்த விலையில் வெங்காயத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
மலிவு விலையில் வெங்காயம் விற்பனை:
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காய விற்பனைத் திட்டத்தை அமைச்சர் வெங்கடரமணன் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
வெளிச்சந்தையில் ரூ.70 வரை விற்பனை:
தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.56 முதல் ரூ.70 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அரசின் இந்தச் சிறப்பு நடவடிக்கை மூலம் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் வெறும் ரூ.35 என்ற மானிய விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது. முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாய விலைக் கடைகள், கூட்டுறவு மொத்த விற்பனை மையங்கள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!
3 மாதத்திற்கு ஒருமுறை விலை கண்காணிப்புக் குழு:
இத்திட்டத்திற்காக மத்திய அரசின் ‘நாஃபெட்’ மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ ரயில் மூலம் தடையின்றி வெங்காயம் மாநிலத்திற்கு வந்து சேர்வதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் வெங்காயத்தை கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கண்காணிக்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலை கண்காணிப்புக் குழு கூட்டப்படும் என்றும், சந்தையில் வெங்காய விலை இயல்பு நிலைக்கு வரும் வரை ரேஷன் கடைகள் மூலமான இந்த மலிவு விலை விற்பனைத் திட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.