5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்… ஆசியக் கோப்பையில் சாதனை படைத்த இலங்கை வீரர் சமரி அதபத்து!
Chamari Athapaththu: இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபதி, ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையின் மூலம், அவர் ஒரு மாபெரும் வரலாறை படைத்துள்ளார். என்ன சாதனை என விரிவாக பார்க்கலாம்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சமரி அதபத்து ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்துள்ளார் . துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், வெறும் 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை சமரி பெற்றுள்ளார்.
வெறும் 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இந்த எளிதான இலக்கை விரட்டிப் பிடித்த இந்தோனேசிய அணிக்கு, சமரி அதபத்து ஒரு கனவு நனவானது போல அமைந்தார். தனது ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு மாயாஜாலத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்திய சமாரி அதபத்து, வெறும் 3.3 ஓவர்களில் 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலித்தார். இதன் மூலம், அவர் இந்தோனேசியாவை வெறும் 49 ரன்களுக்குள் சுருட்டி, இலங்கைக்கு 75 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
Also Read: இந்திய வீரர்களுக்கு இனி 200% உடற்தகுதி தேவை.. ஸ்ட்ரிட் ரூல் போட்ட பிசிசிஐ..!
ஹாட்ரிக் சாதனை
இந்தப் போட்டியின் 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அதபத்து ஹாட்ரிக் எடுத்தார். இதன் மூலம், மகளிர் ஆசியக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த 6வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஆசிய கோப்பை வரலாற்றில் முதன்முறை
ஆண்கள் அல்லது பெண்கள் ஆசியக் கோப்பை வரலாற்றில் எந்தப் பந்துவீச்சாளரும் ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. தற்போது, சமரி அதபத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஆசியக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனையை நிகழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல்
- சமரி அதபத்து (இலங்கை) : 7 விக்கெட்டுகள் / 5 ரன்கள் – மகளிர் டி20 போட்டித்தொடர் – இலங்கை vs இந்தோனேசியா 2026
- அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) : 6 விக்கெட்டுகள் / 13 ரன்கள் -ஆண்கள் ஒருநாள் போட்டித் தொடர் – இலங்கை vs இந்தியா 2008
- முகமது சிராஜ் (இந்தியா) : 6 விக்கெட்டுகள் / 21 ரன்கள் – ஆண்கள் ஒருநாள் போட்டித் தொடர் – இந்தியா vs இலங்கை 2023
- ஜவேரியா கான் (பாகிஸ்தான்) : 6 விக்கெட்டுகள் / 25 ரன்கள் – மகளிர் ஒருநாள் போட்டித் தொடர் – பாகிஸ்தான் vs பங்களாதேஷ் 2008
- புவனேஷ்வர் குமார் (இந்தியா) : 5 விக்கெட்டுகள் / 4 ரன்கள் -ஆண்கள் டி20 போட்டித்தொடர் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் 2022