16-வது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. களத்தில் இறங்கிய அமைச்சர்கள்.. கொடுத்த நேரடி வாக்குறுதி!!
Sanitation Workers Protest: சென்னையில் 16 நாட்களாகப் போராடி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களைத் தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். "பணியாளர்களைக் கனிவோடு நடத்த வேண்டும்; கோரிக்கைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்படும்" என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சென்னை, செப்.04:சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று பணியாளர்களுடன் சுமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக் களத்தில் உள்ள பணியாளர்களைக் காவல்துறையினர் எந்தவிதமான கரடுமுரடான வழிகளிலும் கையாளக் கூடாது என்றும், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் சிறப்பு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
போராட்டக் களத்திற்கு நேரில் வந்த அமைச்சர்கள்:
தொடர்ந்து, பணியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், “நாங்கள் அதிகாரிகளாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இங்கு வரவில்லை; உங்கள் குடும்பத்துச் சகோதரர்களாகவும், பிள்ளைகளாகவுமே நின்றிருக்கிறோம். கடந்த 16 நாட்களாகக் கட்டுப்பாட்டுடன் அமைதி வழியில் போராடி வரும் உங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் கனிவோடு கவனித்து வருகிறார்” என்று எடுத்துரைத்தனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்காகக் குரல் கொடுத்தோம்; தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் இடத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் வெயிலிலும் கொட்டகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதால், முதற்கட்டமாக அவர்களின் முக்கியப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவுட்சோர்சிங் முறையும் நிதிச் சிக்கல்களும்:
கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘அவுட்சோர்சிங்’முறை மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளே தற்போதைய பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பளச் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது. அரசு நிறுவனங்களில் படிப்படியாகப் பணியாளர்களை நியமித்திருந்தால் இந்த நிதிச்சுமை ஏற்பட்டிருக்காது என்றும், கடந்த காலத்தில் அனைத்துத் துறைகளிலும் அவுட்சோர்சிங் முறையைப் புகுத்தியதால் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்தையும் ஒரே நாளில் சீரமைப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. இருப்பினும், கடனில் இயங்கும் நிர்வாகச் சூழலிலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தவே முதலமைச்சர் விஜய் இரவும் பகலும் உழைத்து வருகிறார் என்று நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
போராட்டங்கள் தேவையில்லை:
அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. “இனி நீங்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய அவசியமில்லை. போராட்டக் களத்தில் அமர்ந்து உடலை வருத்திக் கொள்வதற்குப் பதிலாக, எந்நேரமும் தலைமைச் செயலகத்திலோ அல்லது அமைச்சர்களின் அலுவலகத்திலோ எங்களை நேரில் சந்திக்கலாம். கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என்று தூய்மைப் பணியாளர்களுக்கு உறுதியளித்தனர். அதோடு, முதற்கட்டமாகத் தூய்மைப் பணியாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாளர்களில் இருந்து 20 பேரை அழைத்துச் சென்று, அரசு அதிகாரிகளுடன் உடனடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
இக்கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று முதற்கட்டமாக என்னென்ன கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அவற்றை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்து போராட்டத்தைக் கைவிட்டுச் சமூகமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.