“100 நாட்கள் வரை காத்திருக்கப் போகிறீர்களா?”.. தூய்மைப் பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி!!
Sanitation Workers Strike TN Assembly: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து இரு தரப்பும் அளித்த விளக்கங்களின் தொகுப்பு இதோ.
சென்னை, செப்.02: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது குறித்த காரசார விவாதம் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் எதிரொலித்தது. ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்ப, அதற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரிவான விளக்கங்களை அளித்தார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள நிதிச் சிக்கல்கள் மற்றும் பேச்சுவார்த்தை நிலவரங்கள் குறித்து இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்கள் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிக்க: சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!
15 நாட்களாகத் தொடரும் போராட்டம்:
சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு 15-வது நாளை எட்டியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு போன்ற முக்கியக் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். கடந்த முறை இது குறித்து அவையில் அரசு கவனத்திற்குக் கொண்டு வந்தபோது விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு தூய்மைப் பணியாளர்கள் போராடியபோது, இன்றைய முதலமைச்சர் அவர்கள் அவர்களை நேரில் அழைத்துச் பேசி வாக்குறுதி அளித்தார். எனவே, இப்போதும் முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவார்?” என்று கேள்வி எழுப்பினார்.
நிதிச் சிக்கலும் அரசின் விளக்கமும்:
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அரசு உணர்ந்துள்ளது. அவர்கள் வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றிற்குத் தேவையான கோப்புகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் நிர்வாகச் சிக்கல்களை விட மிகப்பெரிய நிதிச் சார்ந்த சிக்கல்களும் அடங்கியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாகச் சேர்த்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்லதொரு தீர்வை எட்ட அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் 100 நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடிக்கொண்டே இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.
அவையில் காரசாரமாக மாறிய விவாதம்:
அமைச்சரின் பதிலுக்கு மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஆட்சிக் காலத்தில் 100 நாட்கள் போராட்டம் நடந்தது என்று கூறும் அமைச்சர், இப்போதும் அதேபோல 100 நாட்கள் முடியும் வரை காத்திருக்கப் போகிறாரா? எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கத் தயாராக இருந்த தற்போதைய முதலமைச்சர், இப்போது ஆட்சியில் இருக்கும்போது அவர்களை நேரில் சென்று சந்திக்க மறுப்பது ஏன்?” எனக் காரசாரமாக வினவினார்.
இதையும் படிக்க: புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்.. 8 பேர் காயம்!
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குச் சுமுகமான தீர்வு காண்பதில் அரசிற்கு மாற்றுக்கருத்து இல்லை. கடந்த ஆட்சியில் அவர்களை ரிப்பன் மாளிகை நடைபாதையில்தான் அமர வைத்தார்கள். ஆனால் தற்போதைய அரசில் அவர்கள் ஜனநாயகப் பூர்வமாக ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள்ளேயே போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை எனது அறைக்கே இரண்டு முறை அழைத்து சுமார் மூன்றரை மணி நேரம் பேசி வருகிறேன். கோப்புகள் தயாராக உள்ளதால் வெகுவிரைவில் இதற்கான நல்ல தீர்வு எட்டப்படும்” என்று கூறி விவாதத்தை நிறைவு செய்தார்.