குடிநீர் தகராறில் ஊராட்சித் தலைவர் கல்லால் அடித்துக் கொலை.. நெல்லையில் கொடூரம்.. பரபரப்பு பின்னணி!!
Panchayat President Killed: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மர்ம நபர் எறிந்த கல் தலையில் பட்டு கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை, செப்டம்பர் 05: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் விநியோகம் தொடர்பாக மக்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பெரும் அசம்பாவிதத்தில் முடிந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட வந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, மர்ம நபர் எறிந்த கல் தலையில் பலமாகத் தாக்கியதில் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கோவையில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கடவுள் ரூபத்தில் வந்த தெருநாய்.. தலைதெறிக்க ஓடிய 16 வயது சிறுவன்!
குடிநீர் பிரச்னையால் வெடித்த வாக்குவாதம்:
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அடுத்த கண்ணநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் விநியோகம் சீராக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணக் கோரி கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் நேரில் சென்று முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கேள்விகளுக்குத் தலைவர் மகாராஜன் பதிலளித்துக் கொண்டிருந்த போது, இருதரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் தீவிரமடைந்தது.
கல்வீச்சில் தலைவரின் விபரீத முடிவு:
வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை நோக்கிப் பெரிய கல் ஒன்றை எறிந்துள்ளார். அந்த கல் மகாராஜனின் தலையில் பலமாகத் தாக்கியதில், அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் கிராமத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: தந்தையின் நண்பர் வீட்டில் கைவரிசை.. 9 பவுன் நகையை திருடி காதலனுக்கு புதிய KTM பைக் வாங்கி கொடுத்த காதலி கைது.. கோவையில் தில்லாலங்கடி சம்பவம்!
போலீசார் அதிரடி விசாரணை மற்றும் எஸ்பி அறிவிப்பு:
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP), ஊராட்சி மன்றத் தலைவர் மீது கல் எறிந்த கொலையாளி அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவரை விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இக்கொலைச் சம்பவத்தால் கண்ணநல்லூர் மற்றும் தாமரைகுளம் பகுதியில் நிலவும் தீவிரப் பதற்றத்தைக் கட்டுப்படுத்தவும், மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் அப்பகுதியில் பலத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.