பேரவை நிகழ்வுகள் ஏஐ கேமரா கண்ணாடி மூலம் படம்பிடிப்பு? அமைச்சர் முகமது பர்வேஸ் அளித்த பரபரப்பு விளக்கம்!
Minister Mohammed Parvez AI Camera Glass : ஏஐ கேமரா கண்ணாடி மூலம் சட்டப்பேரவை நிகழ்வுகளை ரகசியமாக படம் பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் அளித்து உள்ளார். அதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் முகமது பர்வேஸ். இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ. ஐ. தொழில்நுட்ப வசதி உடைய கேமரா பொருத்தப்பட்ட கருப்பு நிற கண்ணாடியை அணிந்து பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியது. இதில், பேரவை நிகழ்வுகளை சிறிய வடிவிலான கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி மூலமாக அமைச்சர் முகமது பர்வேஸ் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில் 15 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தலைவலியின் காரணமாக கருப்பு நிற கண்ணாடி அணிந்திருந்தேன்
தேவைப்படும் மாவட்டங்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து நிறைவேற்றி தரப்படும். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு தலைவலி ஏற்பட்டது. இதன் காரணமாக, கண் மருத்துவமனையில் கண்களை பரிசோதனை செய்தேன். இதில், எனக்கு கண் கண்ணாடி அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில், கருப்பு நிற கண் கண்ணாடியை அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தேன்.
மேலும் படிக்க: இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!




ஏஐ கண்ணாடி என கூறுவது நகைச்சுவையாக உள்ளது
ஆனால், நான் அணிந்த கண்ணாடி செயற்கை நுண்ணறிவு வாயிலாக கிராபிக்ஸ் செய்து, கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை அணிந்ததாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும் போது, நான் எதற்காக செயற்கை நுண்ணறிவு கேமரா கண்ணாடியை அணிய வேண்டும். இந்த விவகாரத்தில் என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நகைச்சுவையாக உள்ளது.
குறை கூறுவதற்காகவே இதுபோன்ற புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்
என்னைப் பற்றி குறை கூற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதில் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த வதந்தியை கிளப்பி விட்டவர்கள் நான் கூறும் உண்மையை ஏற்க மாட்டார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று விளக்கம் அளித்தார். கடந்த சில நாட்களாக அமைச்சர் பர்வேஸ் கருப்பு நிற கண் கண்ணாடியை சட்டப்பேரவைக்கு அணிந்து வந்திருந்தார். இதில். முகப்பு பகுதியில் சிறிய வடிவிலான ரகசிய கேமரா இருப்பதாகவும், அது தொடர்பான புகைப்படங்களை சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவுகள் வைரலாகி வந்த நிலையில், அமைச்சர் இத்தகைய விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும் படிக்க: தம்பியை தாக்கிய வழக்கு.. புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அமைச்சர் மரியவில்சன்!