வெல்கம் மேட் போட்டு தூங்கிய பெண்.. கை, கால்களை கட்டிப்போட்டு நகை-பணத்தை சுருட்டிய கும்பல்.. ராணிப்பேட்டையில் சம்பவம்!
Ranipet Gang Loots Jewelry : ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டின் பின்பக்க வாயில் வழியாக உள்ளே நுழைந்த மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கட்டி போட்டுவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து திமிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மனைவி அமுதா ( 45 வயது). சுப்பிரமணி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், அமுதா மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், அமுதா விவசாயக் கூலி வேலை செய்து கொண்டு, கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த மாடுகளை வீட்டின் பின்புறம் தொழுவம் அமைத்து கட்டி வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் பின்பக்க கதவை அமுதா திறந்து வைத்திருப்பது வழக்கமாம். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அமுதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 10.30 மணி அளவில் 3 மர்ம நபர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு பின்வாசல் வழியாக அமுதாவின் மீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பெண்ணை கட்டிப்போட்டு நகை- பணம் கொள்ளை
அங்கு, வீட்டில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அமுதாவின் முகத்தை துணியால் மூடி, கைரால் அவரது கை கால்களை கட்டி கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால், அச்சமடைந்த அமுதா சத்தம் போடாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, வீட்டின் பீரோ சாவியை அமுதாவிடம் கேட்டு பெற்ற அந்த கும்பல் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டது.
மேலும் படிக்க: கோவையில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கடவுள் ரூபத்தில் வந்த தெருநாய்.. தலைதெறிக்க ஓடிய 16 வயது சிறுவன்!
தானாகவே கட்டை அவிழ்த்து தப்பித்த பெண்
சிறிது நேரம் கழித்து அமுதா கையிறால் கட்டப்பட்ட கட்டை அவிழ்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடையில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியது உள்ளார். அந்த கடையின் உரிமையாளர் உடனடியாக ஆரணி பிரதான சாலையில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், திமிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் லோகேஷ் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி கனகராஜ் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக, அமுதா அளித்த புகாரின் அடிப்படையில் திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.