கடலூரில் கோர விபத்து.. பைக் மீது மோதிய சரக்கு லாரி.. தவெக நிர்வாகி உட்பட 3 பேர் துடிதுடித்து பலி!
Cuddalore Accident 3 Dies : கடலூர் மாவட்டத்தில் முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கனரக லாரி , இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சி. முட்லூர் பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் இன்று பிற்பகல் ஏராளமான வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன. இதில், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களின் பின்னால் சரக்கு லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக முன்னாள் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த சரக்கு லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய இரு சக்கர வாகனம் சிறிது தூரத்துக்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரும் பலத்த ரத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
சாலையோரம் சென்ற பைக் மீது சரக்கு லாரி மோதி விபத்து
உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: தடுப்புகளை மீறி பாய்ந்த குடும்பம்.. முதல்வர் விஜய்யின் வாகனத்தை மறித்து போராட்டம்.. பெரும் பரபரப்பு!




சம்பவ இடத்தில் 2 பேர்- மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் பலி
மற்றொரு நபர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்தது. இதில், வடலூர் பகுதியை சேர்ந்த அஜித் குமார், குகன், கலையரசன் ஆகியோர் என்பதும், இவர்களில் குகன் மற்றும் அஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் தவெக நிர்வாகி உயிரிழப்பு
கலையரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்திருந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தால் சி. முட்லூர் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகன மற்றும் சரக்கு லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் சிக்கிய குகன் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: நாமக்கல்லில் கொடூர சாலை விபத்து.. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பரிதாப பலி!