‘பாரத் என்சிஏபி 2.0’ புதிய கார் பாதுகாப்பு மதிப்பீடு.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு!!
Bharat NCAP 2 Safety Rating: இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்க அக்டோபர் 2027 முதல் 'பாரத் என்சிஏபி 2' கார் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் பைக் டாக்ஸிகளுக்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், உணவகங்கள் பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, செப்.04: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், வாகனப் பயன்பாட்டைப் பாதுகாப்பானதாக மாற்றவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற 66-வது சியாம் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் பரிசோதிக்கும் புதிய பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டமான ‘பாரத் என்சிஏபி 2.0’ (Bharat NCAP 2.0) வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விண்ணில் சீறிப்பாய்ந்த GSLV-F17 ராக்கெட்.. வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்..
கார் பாதுகாப்பு மற்றும் விபத்து தரவுகள்:
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அவற்றில் 1.80 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், இதில் பலியாகுபவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்ற கவலைக்குரிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். உலகளவில் கார் பாதுகாப்பு சோதனைகளுக்கு ரூ.2.5 கோடி வரை செலவாகும் நிலையில், உலகின் 3-வது பெரிய பயணிகள் வாகனச் சந்தையான இந்தியாவில் மிகக் குறைந்த நேரத்திலும் செலவிலும் இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. 2023-இல் தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி திட்டத்தின் தொடர்ச்சியாக, 2027 அக்டோபர் முதல் அமலுக்கு வரும் ‘பாரத் என்சிஏபி 2.0’ திட்டத்தில், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாகனத்தின் முழுமையான பாதுகாப்புச் சங்கிலியும் சோதிக்கப்படவுள்ளது.
ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய சிஸ்டம்:
சாலைப் போக்குவரத்து விதிகளைத் தொடர்ந்து மீறும் ஓட்டுநர்களைக் கட்டுப்படுத்த ‘கிரேடட் பாயிண்ட் சிஸ்டம்’ என்ற புதிய புள்ளி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஓட்டுநர்கள் செய்யும் ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் அவர்களது ஓட்டுநர் உரிமத்தில் புள்ளிகள் குறைக்கப்படும். குறிப்பிட்ட எல்லைக்கு மேல் புள்ளிகள் குறைந்தால் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். அதேவேளையில், விதிகளைச் சரியாகப் பின்பற்றி அதிக புள்ளிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நல்ல ஓட்டுநர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் சிறப்புச் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.
புதிய மாசுக் கட்டுப்பாட்டு சாதனம்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பழைய பிஎஸ் 4 (BS IV) தொழில்நுட்ப வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பையும் அமைச்சர் கட்கரி வெளியிட்டார். ரூ.4,000 முதல் ரூ.5,000 விலையிலான ஒரு சிறப்புச் சாதனத்தைப் பொருத்துவதன் மூலம், பிஎஸ் 4 வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வை பிஎஸ் 6 வாகனங்களுக்கு நிகராகக் குறைக்க முடியும் எனச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் 7.8% வளர்ச்சியால் பிரதமர் மோடி மகிழ்ச்சி.. சாதனை சாத்தியமானது எப்படி?
பைக் டாக்ஸி மூலம் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு:
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பைக் டாக்ஸி சேவைக்குத் தகுந்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நிதின் கட்கரி மீண்டும் கோரிக்கை விடுத்தார். மத்திய அரசு இதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், போக்குவரத்துத் துறை மாநிலங்களின் அதிகார வரம்பில் வருவதால் பல மாநிலங்கள் இன்னும் தாமதம் செய்து வருகின்றன. பைக் டாக்ஸிகளுக்கு முழுமையாக அனுமதி அளிப்பதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.