மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு.. தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த கோரிக்கை..
இந்த 7 மாநிலங்களும் தங்களது நீதித்துறை சேவை விதிகளில் திருத்தம் செய்து, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதித் திருத்தங்களை முடிந்தவரை விரைவாகவும், அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5, 2026: அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நீதித்துறை அதிகாரிகள் பணியில் இருந்து விலகுவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மாவட்ட நீதித்துறையில் பணியாற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த கோரிக்கை:
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு, அகில இந்திய நீதிபதிகள் சங்கம் மற்றும் மத்திய அரசு தொடர்பான வழக்கை விசாரித்தது. அப்போது, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநில அரசுகள், மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒப்புதல் தெரிவித்திருப்பதை நீதிமன்றம் பதிவு செய்தது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முடிவு?
இதையடுத்து, இந்த 7 மாநிலங்களும் தங்களது நீதித்துறை சேவை விதிகளில் திருத்தம் செய்து, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதித் திருத்தங்களை முடிந்தவரை விரைவாகவும், அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விதிகளில் அதிகாரப்பூர்வமாக திருத்தம் செய்யப்படும் வரை, ஏற்கனவே 60 வயதை எட்டிய நீதித்துறை அதிகாரிகள் ஓய்வு பெற வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்கள் 60 வயதுக்கு பிறகும் பணியாற்றுவதற்கான தகுதியை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி…. விமானியை பணிநீக்கம் செய்த ஏர் இந்தியா
யாருக்கெல்லாம் இது பொருந்தும்?
மார்ச் 31, 2026 அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அவர்கள் வேறு பணியில் சேரவில்லை என்றால், மீண்டும் நீதித்துறை பணியில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். அவ்வாறு பணிக்கு திரும்புபவர்களுக்கு ஊதியம், பணி மூப்பு, பணித் தொடர்ச்சி உள்ளிட்ட உரிய பலன்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், ஓய்வுக்குப் பிறகு ஏற்கனவே பெற்ற பலன்களை அவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:
இதனிடையே, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பான தங்களது முடிவை மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்த விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பான விவகாரம் நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.