AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!

Anbumani Ramadoss Slams TVK Govt: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டித் தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்டணக் கொள்ளையைத் தடுக்காமல் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாகச் சாடியுள்ள அவர், இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!
அன்புமணி ராமதாஸ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Sep 2026 07:03 AM IST

சென்னை, செப்டம்பர் 11: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தலைநகர் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்திற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை விண்ணைத் முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளனர். வழக்கமான கட்டணத்தை விடப் பல மடங்கு உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இக்கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கண்டும் காணாமல் இருக்கும் தவெக அரசு:

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தனியாரின் இந்த அநியாயக் கட்டண உயர்வுக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்வதற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல ஆயிரங்களை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற வரலாற்று காணாத கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டிய தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பயணக் கட்டணத்தை காட்டி சரமாரி கேள்வி:

முக்கியமாக, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தற்போதைய பேருந்துக் கட்டணப் பட்டியலைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல ரூ.4,899, கோவைக்குச் செல்ல ரூ.6,154, கும்பகோணத்திற்குச் செல்ல ரூ.3,419 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் போதிய இட வசதி இல்லாத சூழலிலும், ரயில் பயணச் சீட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையிலும், சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறு வழியின்றி இந்த அநியாயக் கட்டணத்தைக் கொடுத்துப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“இதுதான் நீங்கள் பேசும் மாற்றமா?”:

மாற்றம் என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் தவெக அரசு, தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளின் இத்தகைய கட்டணக் கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறதா என்ற காரசாரமான கேள்வியை அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ளார். “பொதுமக்களின் பாக்கெட்டைக் காலி செய்யும் இத்தகைய கூடுதல் கட்டணக் கொள்ளைதான் நீங்கள் வாக்குறுதி அளித்த மாற்றமா?” என்று வினவியுள்ள அவர், பெயரளவில் கூட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்காமல் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

இதையும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!

உடனடியாக அரசு தலையிட கோரிக்கை:

பண்டிகைக் காலங்களில் வெளியூர் செல்லும் சாமானிய மக்கள் தங்களின் உழைப்பில் கணிசமான தொகையைப் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தரக் குடும்பங்களின் நிதிநிலையைப் பெரிதும் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டிய அன்புமணி, உடனடியாகப் போக்குவரத்துத் துறையும் தமிழக அரசும் இதில் தலையிட்டுத் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்திய பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களின் பயணத்தைச் சுலபமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us