கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!
Kerala Accident TN Students Died : கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்துக்கு முன்னதாக மது அருந்தி இருக்கலாம் என்று அந்த மாநிலத்தின் தடய அறிவியல் மருத்துவர் பதிவு வெளியிட்டு உள்ளார் .
கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் விபத்துக்கு முன் மது அருந்தி இருக்கலாம் என்று தடய அறிவியல் மருத்துவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள மாநிலம், திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறை தலைவரும், உடல் கூராய்வை மேற்கொண்ட மருத்துவர் ஹிதேஷ் சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல் கட்ட மதிப்பீட்டின்படி தமிழக மாணவர்கள் மது அருந்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும், மாணவர்களின் ரத்தத்தில் மதுவின் அளவு இருந்தது மட்டுமே விபத்துக்கு காரணம் என்று உறுதியாக கூறி விட முடியாது. ஏனென்றால், மது அருந்தி இருப்பது ஓட்டுனரின் கவனம், முடிவெடுக்கும் திறன், எதிர்வினை நேரம் மற்றும் வேகத்தை கணிக்கும் திறனை பாதித்து விபத்துக்கான வாய்ப்பை அதிகரித்து இருக்கும்.
சமூகவலைதளத்தில் மருத்துவர் வெளியிட்ட பதிவு
இது தொடர்பான ஆய்வக முடிவுகள் வந்த பின்னரே மாணவர்கள் மது அருந்தினார்களா அல்லது போதை பொருள்களின் பயன்பாடு இருந்ததா என்பது குறித்து முழுமையாக உறுதி பட தெரிவிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மதுரை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 8 பேர் ஒரு காரில் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு, குருவாயூர் சென்று விட்டு கொச்சி செல்ல திட்டமிட்டனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் படத்தில் வசனம் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!




கேரள சாலை விபத்தின் பரபரப்பு பின்னணி
அதன்படி, அந்த மாணவர்கள் கொச்சிக்கு புறப்பட்டு சென்றபோது திருச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திருச்சூர் கைப்பமங்கலம் பகுதியில் பனம்பிக் குன்னு சென்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், இதில், 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மாணவர்கள் கால்கள் துண்டிப்பு- உடல் உறுப்புகளில் பலத்த காயம்
இந்த விபத்தில் மாணவர்களின் தலை, நெஞ்சு மற்றும் உள் உறுப்புகளில் மிக பலத்த காயங்கள் ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர்களின் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட அளவுக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னை தவெக பிரமுகர் கொலை சம்பவம்.. கெத்தாக வலம் வந்ததால் கொன்றேன்.. கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்!