சென்னை தவெக பிரமுகர் கொலை சம்பவம்.. கெத்தாக வலம் வந்ததால் கொன்றேன்.. கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்!
TVK Functionary Murder : சென்னையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கல்லூரி மாணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் .
சென்னை மாவட்டம், பெசன்ட் நகர், வண்ணான் துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் ( 45 வயது). இவர், அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில், அந்த கட்சியில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இவர், ஐ.டி. நிறுவனங்களுக்கு கார்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள எல்லை அம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தவெக பிரமுகர் கண்ணனை கற்களால் வீசி தாக்கினர். தொடர்ந்து, அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை கும்பலை தேடி வந்தது.
கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
இதில், ருக்மணி நகரை சேர்ந்த கல்லூரி மாணவரான பரணி ( 20 வயது) மற்றும் அவரது நண்பர்களான நரேஷ், மணிகண்டன், ராகேஷ், ஹரிஹரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலைக்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்தனர். இதில், தவெக பிரமுகர் கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு 17 ஆண்டு கால பகையே காரணம் என தெரியவந்தது. கடந்த 2009- ஆம் ஆண்டு கல்லூரி மாணவரும் பரணியில் பெரியப்பா சிவா, தவெக பிரமுகர் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர்.
மேலும் படிக்க: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?
தந்தை- பெரியப்பா கொலைக்கு பழி தீர்ப்பு
இதை போல கடந்த 2016- ஆம் ஆண்டு பரணியின் தந்தை வேலுவும் கொலை செய்யப்பட்டார். இருவரின் கொலைக்கு கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் காரணம் என மாணவர் பரணி எண்ணினார். இதன் காரணமாக அவரை கொலை செய்வதற்கு பரணி திட்டமிட்டு தனது நண்பர்களின் உதவியை நாடி உள்ளார். அதன் அடிப்படையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன், பரணி உள்ளிட்டோரை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தனக்கு 2 மகள்கள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாக போகலாம் என்று தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்து பெரிய ஆள் போல வலம் வந்ததால் ஆத்திரம்
இதற்கு, பரணி சம்மதம் தெரிவித்து அவரை நம்ப வைத்துள்ளார். ஆனால், அண்மையில் தவெகவில் இணைந்து பெரிய ஆள் போல் வலம் வந்ததை எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், அவரை உயிரோடு விட்டால் எங்களுக்கு மேலும் ஆபத்து நேரிடும் என எண்ணி அவரை திட்டமிட்டு தீர்த்து கட்டினேன். தற்போது தான் எனது தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்ததாக தெரிவித்துள்ளார் கல்லூரி மாணவர் பரணி.
மேலும் படிக்க: இரும்பு கம்பியில் சிக்கிய யானை.. இடது முன்னங்காலில் பலத்த காயம்.. இரவு, பகலாக பணியாற்றிய வனத்துறை!