இரும்பு கம்பியில் சிக்கிய யானை.. இடது முன்னங்காலில் பலத்த காயம்.. இரவு, பகலாக பணியாற்றிய வனத்துறை!
Elephant Trapped Iron Bars In Coimbatore : கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரும்பு கம்பியில் சிக்கி பலத்த காயம் அடைந்த யானையை வனத்துறை ஊழியர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் இரவு, பகலாக சிகிச்சை அளித்து விடுவித்தனர். தொடர்ந்து, யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரும்பு கம்பியில் சிக்கி பலத்த காயமடைந்த யானையை வனத்துறை ஊழியர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து விடுவித்தனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி கிழக்குச் சரிவு, சிறுமுகை வனச்சரகம், கோவை வனக்கோட்டம், உளியூர் காவல் சுற்று வனப்பகுதியில் பெண் யானை ஒன்றின் இடது முன்னங்காலில் இரும்பு கம்பி சிக்கி பலத்த காயம் அடைந்து இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர், கோயம்புத்தூர் வன கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
5 வன கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை
அதன்படி, கோவை தலைமை வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் மூலமாக சென்னை முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை சேர்ந்த 5 வன கால்நடை மருத்துவர்கள் குழு மூலமாக சுமார் 60 வன பணியாளர்கள் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பணியானது இரவு, பகல் பாராமல் நடைபெற்றது.
மேலும் படிக்க: “விஜயகாந்த் என்ற வைரத்தை இழந்தோம்!”.. மேடையில் உடைந்த விஜய பிரபாகரன்!!
ட்ரோன்கள் மூலமாக கண்காணிப்பு பணி
இந்த பணியில், யானை பாகன்கள் மற்றும் யானையின் இருப்பிடத்தை கண்டறிவதற்காக நவீன ட்ரோன் கேமராக்கள் கொண்ட குழுவின் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 6- ஆம் தேதி) பெண் யானை வனப்பகுதியில் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், யானையின் இடது முன்னங்காலில் இரும்பு கம்பி பலமாக சுற்றி கடுமையான காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
இரும்பு கம்பியை அகற்றி யானை விடுவிப்பு
இதற்காக, வனத்துறை ஊழியர்கள் ஊசி மூலமாக மயக்கம் மருந்து செலுத்தினர். இதில், அந்த யானை மயங்கிய நிலையில், அதன் காலில் பலமாக சுற்றி இருந்த இரும்பு கம்பியை அகற்றி, காயம் ஏற்பட்டிருந்த இடத்தில் சிகிச்சை அளித்தனர். யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் யானை நடந்து செல்வதற்கு சற்று சிரமம் ஏற்பட்டது. அத்துடன், அந்த காயத்துக்கு சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் சிரமம் அடைந்தனர்.
யானையை தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறை
தொடர்ந்து, இரவு, பகலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, யானை அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், யானை காட்டுப் பகுதிக்குள் செல்வதையும், அந்த யானையின் காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் அதன் உடல் நலத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: இன்று முதல் சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கும்!