பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி..
“அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பதிலற்ற பதிலுரை, பழிபோடும் பேச்சு, டைவர்ஷன் டாபிக்ஸ். மொத்தத்தில் எந்த பிரிபரேஷனும் இல்லாமல் ‘ரோல், கேமரா, ஆக்ஷன்’ மோடில் கிரிஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். டம்மி சி.எம். என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 7, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் சரமாரியாகப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் குறித்தும், அமலாக்கத்துறை முன்வைத்ததாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு:
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவின் மூத்த உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களுக்கு நல்லது நடக்காது எனக் கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக வாக்களித்த மக்களைப் பார்த்து எப்படி இவ்வாறு பேச முடியும்? மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், “நாங்கள் ஊழல் கோப்புகளைத் திறப்போம் என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். அதற்காக சில முக்கிய தகவல்களை மட்டும் இங்கு எடுத்துச் சொல்கிறேன். ரூ.16 கோடி மதிப்பிலான டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷனாக ரூ.40 லட்சம் கேட்கப்பட்டதாகவும், 1970 முதல் 1974ஆம் ஆண்டு வரை 7 தவணைகளில் ரூ.29 லட்சம் கையூட்டாகப் பெறப்பட்டதாகவும்” பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார்.
தவனை முறையில் கையூட்டு பெற்ற வரலாறு திமுகவிற்கே சேரும்:
“தவணை முறையில் கடனை அடைப்பது போல கையூட்டு பெற்ற வரலாறு இது. இதையெல்லாம் நாங்கள் கூறவில்லை. அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முதல்வர் விஜய்:
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய 45 நிமிட பதிலுரையில் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே காவல்துறை நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாகவும், அதன் பின்னர் திமுக மீது ஆதாரமற்ற பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியதாகவும் விமர்சித்தார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மூன்று நாட்களாக உட்கார்ந்து மனப்பாடம் செய்து வந்து, சினிமா சூட்டிங்கில் பேசுவது போல் பஞ்ச் டயலாக்குகளையும், ரூல்ஸுக்கான ஆக்டிங்கையும் சட்டப்பேரவையில் செய்துள்ளார். நாங்கள் கேட்ட எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு கேள்விக்கும் அல்லது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
“பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?”
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை – பழிபோடும் பேச்சு – diversion tactics – மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக்…
— Udhay (@Udhaystalin) September 7, 2026
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பதிலற்ற பதிலுரை, பழிபோடும் பேச்சு, டைவர்ஷன் டாபிக்ஸ். மொத்தத்தில் எந்த பிரிபரேஷனும் இல்லாமல் ‘ரோல், கேமரா, ஆக்ஷன்’ மோடில் கிரிஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். டம்மி சி.எம்., எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்கப் பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயார் படுத்திக்கொண்டு வர வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.