“தவெக-வினரையும் கண்டியுங்கள்!”.. பேரவையில் முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வைத்த கோரிக்கை!
Premalatha Vijayakanth Assembly Speech: பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பைப் பிரேமலதா விஜயகாந்த் பேரவையில் வரவேற்றார். அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் தவெகவினரும் எல்லை மீறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், காவலர்களின் நலன், ஊர்க்காவல் படையினரின் சம்பள உயர்வு மற்றும் விவசாயிகளின் நெல் கொள்முதல் குறித்துப் பேரவையில் விரிவாகப் பேசினார்.
சென்னை, செப்டம்பர் 07: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைக் காப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட கறாரான அறிவிப்பைப் பேரவையில் மனதாரப் பாராட்டி வரவேற்ற அவர், அதேநேரத்தில் அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதுபட்சபாதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: “முதல்வர் சொன்னாலும் அனுமதி கிடையாது!”.. திமுக-வுக்கு வாய்ப்பளிக்க சபாநாயகர் மறுப்பு.. பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு!
தவெக உறுப்பினர்களை கண்டிக்க வேண்டும்:
பேரவையில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “சமூக வலைதளங்களிலோ அல்லது பொது மேடைகளிலோ பெண்களைப் பற்றித் தவறாகவும் கொச்சையாகவும் செய்தி பரப்புபவர்கள் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை ஒரு பெண் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நான் மனதார வரவேற்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் பெண் தலைவர்களைப் பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் மிகக் கொச்சையாகப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சர் தனது சொந்தக் கட்சியினரையும் தயவுதாட்சணியமின்றி கண்டிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர்கள், பெண்களை இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கட்சித் தலைமையும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும், பல போலி கணக்குகள் மூலம் திமுகவினரே திட்டமிட்டுத் தவெக பெயரைப் பயன்படுத்தி இத்தகைய தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர்கள் பேரவையில் விளக்கம் அளித்தனர்.
காவலர்கள் கோரிக்கை, ஊர்க்காவல் படை ஊதியம்:
தொடர்ந்து காவல்துறையின் மானியக் கோரிக்கை குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சர் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால், தமிழகம் முழுவதும் இரவு பகலாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான காவல்துறையினர் தங்களின் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகளை இந்த மானியக் கோரிக்கையில் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மிகக் குறைந்த அளவாக வெறும் 12,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 16,000 ஊர்க்காவல் படையினருக்கு உடனடியாகச் சம்பள உயர்வு வழங்கிட வேண்டும். மேலும், துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்புதல், காவலர்களுக்குப் புதிய குடியிருப்புகள் கட்டுதல் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் அவர்களின் தாய்-தந்தையரையும் சேர்ப்பது போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: “வாங்கி பழகிய கை.. பேசி பழகிய பை!”.. பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தோண்டித் துருவிய முதலமைச்சர் விஜய்!
அதிகரிக்கும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்:
மேலும், காவல் மரணங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்திய பிரேமலதா விஜயகாந்த், எல்லை தாண்டிய சைபர் கிரைம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும் என எச்சரித்தார். இறுதியாக, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான டன் நெல் மணிகள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுக் மழையில் நனைந்து பாழாகும் சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டினார். விவசாயிகள் நஷ்டமடைவதைத் தவிர்க்க, திறந்தவெளியில் உள்ள நெல் மணிகளை அரசு உடனடியாகப் பாதுகாப்பாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனப் பேரவையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.