“எலும்பை உடைப்பாராம்!.. ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகிறது”.. பேரவையில் முதல்வர் விஜய் ஆவேச உரை!!
CM Vijay Assembly Speech: "அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம்" எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், "ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடுகிறது" எனக் குறிப்பிட்ட அவர், நாகரிகமற்ற அரசியலைப் பேசிப் பேசியே எதிர்க்கட்சியினர் அங்கு அமர்ந்துள்ளனர் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
சென்னை, செப்டம்பர், 07: தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசியல் நாகரிகம் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் மிகக் காரசாரமான உரையை முன்வைத்தார். பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் தலைவர்கள் பயன்படுத்தும் சொற்கள் குறித்து ஆதங்கம் தெரிவித்த அவர், அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் சாமானிய மக்களையோ அல்லது பெண்களையோ தரம் தாழ்த்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ச்சிப்பூர்வமாக அவர் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!
“நம் வீட்டுப் பெண்களாக நினைத்துப் பேச வேண்டும்”:
சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் நிலவும் சூழல் குறித்துச் சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர், “சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் ஒரே ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்கள் குறித்து அவதூறாகவும், இரட்டை அர்த்தத்திலும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பேசுபவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் தாய், அக்கா, தங்கச்சியாகவே மற்ற பெண்களையும் கருதிப் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தனது வாழ்க்கையில் தனக்கு மக்கள் அளித்த உயரிய இடத்திற்குத் தாய்மார்களும் பெண்களுமே மிக முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இனி எந்தவொரு பெண்ணுக்கும் எதிராக இழிவான பேச்சுகளோ அவதூறுகளோ வந்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும், சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்றும் எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்த ஆவேசக் கணைகள்:
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முந்தைய பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர், “ஒருவர் ‘ஆர்த்தோ சர்ஜன்’ போலச் சட்டசபைக்குள் வந்து எலும்பை உடைப்பாராம்! இன்னொருவர் சொல்கிறார், ‘மக்களுக்கு நல்ல சாவு வராது’ என்கிறார். இதையெல்லாம் பேசிப் பேசித்தான் இன்றைக்குச் சட்டசபையில் அவர்கள் எதிர்க்கட்சியில் சென்று அமர்ந்துள்ளார்கள்” என விமர்சித்தார். அரசியல் மேடைகளில் வன்மத்தையும் அநாகரிகமான பேச்சுக்களையும் விதைப்பவர்களுக்கு மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவரது இந்தப் பேச்சு சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் சந்தித்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசிய அவர், “கடந்த காலத்தில் சட்டமன்றத்திற்குள்ளேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக எத்தனையோ அவமானங்களைச் சந்தித்தார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எதிர்காலத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் அப்படி ஒரு சூழல் வரக்கூடாது என்பதில் இந்த அரசு மிகத் தெளிவாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “கோடி கோடியா பணமும்.. அமைச்சர் பதவியும் தந்தாங்க!”.. பரபரப்பை கிளப்பிய IUML எம்.எல்.ஏ-வின் பேச்சு!!
தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் பேச்சு குறித்துப் விமர்சித்த முதலமைச்சர், “அரசியல் ரீதியான விமர்சனங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சட்டமன்றத்திற்குள்ளேயே ‘எலும்பை உடைப்பேன்’ என்றெல்லாம் பேசுவதுதான் அரசியலா? இப்படிப்பட்ட பேச்சுகளைப் பார்த்து பார்த்துதான் மக்கள் அவர்களை அந்தப் பக்கம் (எதிர்க்கட்சி வரிசையில்) உட்கார வைத்துள்ளார்கள்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.