“யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!
CM Vijay vs Udhayanidhi Stalin: சட்டப்பேரவையில் டிஜிபி நியமனம், போக்சோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த முதல்வர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பேரவையில் பதிலளிப்பதாகச் சவால் விடுத்து உறுதியளித்தார்.
சென்னை, செப்.03: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. டிஜிபி நியமனத்தில் மாநில உரிமைகள், போக்சோ வழக்குகள் கையாளுதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முந்தைய திமுக அரசின் சாதனைகளையும், தற்போதைய அரசின் நிர்வாக முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை பேரவையில் முன்வைத்தார்.
இதையும் படிக்க: “116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!
குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை:
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், டிஜிபி தேர்வில் மத்திய அரசின் யுபிஎஸ்சி தலையீடு அதிகமாக இருந்தபோது மாநில உரிமைகளுக்காகத் திமுக அரசு நீதிமன்றத்தை நாடியதை நினைவு கூர்ந்தார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறைக்கு ஏற்ற அதிகாரியை நியமித்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்க முடியும் என்ற நோக்கில் இடைக்கால நடவடிக்கைகளை எடுத்ததாக விளக்கமளித்தார். மேலும், போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கையின் காரணமாகவே புகார்கள் அதிகரித்து, உடனடியாக குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரப்பட்டதாகத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டை லாஜிக்காகத் தட்டிக்கேட்டார்:
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பில் முந்தைய அரசு சரியாகச் செயல்படவில்லை என்று தற்போதைய அரசு வைக்கும் குற்றச்சாட்டை லாஜிக்காகத் தட்டிக்கேட்டார். திமுக ஆட்சியில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலும், மதுவிலக்கு மற்றும் கலால் துறையிலும் சிறப்பாகப் பணியாற்றிய ஐபிஎஸ் மகேஷ்குமார் அகர்வாலைத் தற்போதைய அரசு டிஜிபியாகவும், அமல்ராஜை சென்னை மாநகரக் காவல் ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கி நியமித்திருப்பது ஏன் என்றும், முந்தைய அரசின் நடவடிக்கை சரியாக இல்லை என்றால் இந்த நியமனங்கள் எப்படி சாத்தியம் என்றும் கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிக்க: விளையாட்டுத் துறையில் புதிய மைல்கல்!.. ‘ஒலிம்பிக் நகரம்’ முதல் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ வரை.. அச்சத்தல் அறிவிப்புகள்!!
திங்கள்கிழமை பேரவையில் பதிலளிக்கிறேன்:
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த காரசாரமான விவாதங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பேரவையில் உடனடியாகக் குறுக்கிட்டுப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் தமக்கு உடனுக்குடன் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், “மாண்புமிகு உறுப்பினர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை வரும் திங்கள்கிழமை பேரவையில் நான் விரிவாக வழங்குகிறேன். ஆனால் பேரவையில் கேள்வி கேட்கும் உறுப்பினர்களிடம் இருந்து ஒரு வாக்குறுதியை மட்டும் கேட்கிறேன். திங்கள்கிழமை நான் பதிலளிக்கும் போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது” எனப் பேரவையில் சவால் விட்டு உறுதியளித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பதில் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.