“116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!
TN Assembly debate: தமிழகச் சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது தூத்துக்குடியில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த அமைச்சர் என். ஆனந்த், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.
சென்னை, செப்.03: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே கடும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடினார். எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்னைகளை எழுப்புவது தங்களின் கடமை என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் கேள்விகளுக்குத் திசைதிருப்பல் இல்லாமல் நேரடியான பதில்களை அளிப்பார் என்ற நம்பிக்கையோடு உரையைத் தொடங்குவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: விளையாட்டுத் துறையில் புதிய மைல்கல்!.. ‘ஒலிம்பிக் நகரம்’ முதல் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ வரை.. அச்சத்தல் அறிவிப்புகள்!!
ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு:
அரசு தாக்கல் செய்துள்ள காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, திராவிட மாடல் ஆட்சியின் போது கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதியப் பாகுபாடுகள் கணிசமாகக் குறைந்திருந்ததை புள்ளிவிவரங்களுடன் தற்போதைய அரசே தனது அறிக்கையில் நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. ஆனால் புதிய திட்டங்களைக் கொண்டு வந்ததை விட, முந்தைய கழக அரசு கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஈசிஆர் மேம்பாலம், ஓசூர் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை ரத்து செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. கழக ஆட்சியில் ‘டாப் கியரில்’ சென்ற தமிழ்நாடு, தற்போது 116 நாட்களில் ‘ரிவர்ஸ் கியரில்’ சென்று கொண்டிருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.
தாய்மாமன் காதுகுத்து திட்டம்:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு காட்டும் தொய்வு குறித்தும் அவர் அடுக்கடுக்கான புகார்களை வைத்தார். விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு 6 இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகள் எதையும் முழுமையாகச் செயல்படுத்தாமல், ஸ்லாப்கள் வைத்தும் நிபந்தனைகள் விதித்தும் அரைகுறையாகச் செயல்படுத்துவதாகச் சாடினார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எனக் கூறிவிட்டு, ஒட்டுமொத்தமாக ‘தாய்மாமன் காதுகுத்து திட்டம்’ போல் இந்த அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும், மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதை விட சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ போடுவதிலேயே அரசு அதிகக் கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்தார்.
10 ஆணவக்கொலைகள் நிகழ்ந்து மெளனம்:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் தினசரி செய்திகளாக மாறியுள்ளன என்று வேதனை தெரிவித்தார். ஒரே மாதத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளதாகவும், 10 ஆணவக் கொலைகள் நிகழ்ந்தும் அரசு மௌனம் காப்பதாகவும் சாடினார். அத்துடன், சிறையில் நீண்ட காலமாக வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என்றும், ஐந்தாவது காவல் ஆணையத்தின் நீண்டகாலப் பரிந்துரைகளை இந்த அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தவெக எம்எல்ஏ மீது பாலியல் புகார்:
உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பெயரைச் சொல்லி பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அது குறித்து அப்பெண் புகார் அளித்தபோதிலும் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பேரவையில் குற்றம் சாட்டினார். தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேள்வி எழுப்பினார்.
கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்:
இதற்கு உடனடியாகக் குறுக்கிட்டுப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இப்புகாரில் தொடர்புடைய பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் பாலசுப்பிரமணியன் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் விளக்கமளித்தார்.
இதையும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்:
மேலும், காவல்துறையின் தீவிர விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்டார். “தவறு செய்பவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தயவுதாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல், எங்கள் முதலமைச்சர் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கூடியவர்” என்று பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.