AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“வாங்கி பழகிய கை.. பேசி பழகிய பை!”.. பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தோண்டித் துருவிய முதலமைச்சர் விஜய்!

CM Vijay Assembly Speech: மக்களுக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக நல்ல சாவு வராது என்று பேசுவதா?" எனச் சட்டப்பேரவையில் திமுகவை முதலமைச்சர் விஜய் சாடியுள்ளார். மேலும், "பேசி பழகிய பை, வாங்கி பழகிய கை" எனத் திமுகவை விமர்சித்த அவர், சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் பக்கங்களை மேற்கோள் காட்டி ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுப் பேரவையை அதிர வைத்தார்.

“வாங்கி பழகிய கை.. பேசி பழகிய பை!”.. பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தோண்டித் துருவிய முதலமைச்சர் விஜய்!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Sep 2026 10:43 AM IST

சென்னை, செப்டம்பர் 07: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் திமுகவின் வரலாற்றுப் பின்னணி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார். ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதிக்காமல், மக்களுக்கு எதிராகப் பேசும் திமுக தலைவர்களின் போக்கைக் சுட்டிக்காட்டிய அவர், கவிஞர் கண்ணதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி திமுகவை விமர்சித்தார். மேலும், ஆளுங்கட்சியினர் கேட்கும் ஆதாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் தகவல்களைப் பேரவையில் வாசித்துக் காட்டிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிக்க: “எலும்பை உடைப்பாராம்!.. ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகிறது”.. பேரவையில் முதல்வர் விஜய் ஆவேச உரை!!

கவிஞர் கண்ணதாசனின் வரிகள்:

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “திமுகவின் மூத்த உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களுக்கு ‘நல்ல சாவே வராது’ என்று பேசியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக வாக்களித்த மக்களைப் பார்த்து எப்படி இப்படிப் பேச முடிகிறது? மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியலில் பாரம்பரியம், அனுபவம் என்று பேசும் திமுகவைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் அன்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்; ‘பேசி பழகிய பை, வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை… இதுதான் திமுக!’ நமது அரசு என்பது தனிப்பட்ட அடையாளம் அல்ல; எட்டு கோடி தமிழ் மக்களின் அரசு. எம்.ஜி.ஆர் பாடியது போல ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவோம்; தமிழக மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வோம்’ என்ற பாதையில் நாங்கள் செயல்படுகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

சர்க்காரியா அறிக்கையும், ஊழல் பின்னணியும்:

எதிர்க்கட்சியினர் தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கோருவதைக் குறிப்பிட்ட முதலமைச்சர், “நாங்கள் ஊழல் கோப்புகளைத் திறப்போம் என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். இதோ ஒரு சிறிய மாதிரி சாம்பிள்” எனக் கூறி சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் சுருக்கத்தைப் படித்தார். “1970-களில் வீராணம் திட்டக் குழாய்கள் தயாரிக்கும் டெண்டரைச் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வழங்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் முதல் தொகுதியில் 71 முதல் 150-வது பக்கம் வரை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 16 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷனாக 40 லட்சம் ரூபாய் கேட்கப்பட்டதாகவும், 1970 முதல் 1974 வரை 7 தவணைகளில் 29 லட்சம் ரூபாய் கையூட்டாகப் பெறப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!

சட்டமன்ற நூலக ஆதாரமும், நேரடிச் சவாலும்:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “தவணை முறையில் கடன் அடைப்பது போலக் கையூட்டு பெற்ற வரலாறு இது. இதையெல்லாம் நாங்கள் கூறவில்லை; அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே ‘சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொன்விழா கண்ட கட்சியின் சாதனை இதுதான். இதற்கு ஆதாரம் வேண்டுமென்றால் டெல்லி வரை செல்ல வேண்டாம், நமது சட்டமன்ற நூலகத்திலேயே சர்க்காரியா கமிஷன் புத்தகம் உள்ளது. தங்களை ‘மிஸ்டர் கிளீன்’ என்று கூறிக்கொள்பவர்கள் இந்த வரலாற்று ஆதாரங்களைப் போய் எடுத்துப் பார்க்கட்டும். மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வருவதே நமது அரசின் கடமை” என்று ஆவேசமாகத் தன் உரையை நிறைவு செய்தார்.

Follow Us