தரையில் அமர்ந்த திமுக தூக்கிவிட்ட தவெக – அவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
தரையில் அமர்ந்த திமுகவை தூக்கிவிட்ட தமிழக வெற்றிக் கழகம் என்பது போலத்தான் இன்றைய அரசியல் இருந்தது” என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து வந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவையில் அமைச்சர் தெரிவித்தார்.
செப்டம்பர் 7, 2026: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வை சுட்டிக்காட்டி, “தரையில் அமர்ந்த திமுகவை தூக்கிவிட்ட தமிழக வெற்றிக் கழகம்” என்பது போல் அரசியல் இருந்ததாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர்:
இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரிய நிலையில், முதலமைச்சர் அதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், சபாநாயகர் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் நடுப்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!
அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தரையில் அமர்ந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் இருந்ததாகவும், அவருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கை கொடுத்து எழுந்திருக்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நின்றபடி கேட்டனர்:
இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எதிர்க்கட்சியினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!
மேலும், “நாங்கள் கூட முதலமைச்சர் பேசும்போது அமர்ந்துதான் கேட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நின்றுகொண்டு மரியாதையாகக் கேட்டனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. ஆனால், பின்னர் அவை மாண்பை மீறி தரையில் வந்து அமர்ந்தனர். உட்கார்ந்தவர்கள் படார் என எழுந்திருக்க முடியவில்லை. அப்போதும் முதலமைச்சர் எழுந்து, கை கொடுத்து அவரை தூக்கிவிட்டார்” என்றார்.
திமுகவை தூக்கிவிட்ட தவெக:
“தரையில் அமர்ந்த திமுகவை தூக்கிவிட்ட தமிழக வெற்றிக் கழகம் என்பது போலத்தான் இன்றைய அரசியல் இருந்தது” என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து வந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவையில் அமைச்சர் தெரிவித்தார்.