தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!
Minister K A Sengottaiyan Latest Pressmeeet : தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை குறிப்பிட்டு சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது .
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களித்து தவெக தலைவர் ஜோசப் விஜய்யை முதல்வராக அமர வைத்துள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர் தான் நிரந்தரம் முதல்வர். தமிழக மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வரலாற்றை படைத்து வருகிறார். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு ஆளுமையாக விளங்கி வருகிறார்.
திமுகவுக்கு தான் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன
திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறுவது போல தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை. திமுகவுக்கு தான் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 100 சதவீத வெற்றியை பதிவு செய்யும். தொடரும் மின்வெட்டை சரி செய்வதற்காக மின் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மின்வெட்டு சரி செய்யப்படும். கடந்த 2017- ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் திமுக உறுப்பினர் செய்த அராஜகம் அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க: Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!




தவெக கூட்டணியில் இணைகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்
முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை. தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழக இடைத்தேர்தலுக்கு முன்னதாக தவெக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளது என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி முறித்து விட்டு தவெக கூட்டணிகள் இணைந்துள்ளது.
கம்யூனிஸ்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறாமலும், தவெக கூட்டணியில் இணையாமலும் மத்தியஸ்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான், தவெக அமைச்சர் செங்கோட்டையன் தவெக கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையும் என்று தெரிவித்துள்ளார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை மறைமுகமாக குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!