தென்காசி டிஎஸ்பி பால்சுதரின் கெமிக்கல் ஆப்பு! நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் உள்பட இருவர்.. தூண்டில் போட்டு தூக்கிய DVAC போலீஸ்!
Tenkasi Surveyor Arrested For Accepting Bribe : கடையநல்லூரில் நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேர் உள்பட இருவரை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மிட்டா ஆஃபீஸ் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவர், தனது பெயரில் இருந்த இடத்தை தனது மகன்களான கருப்பசாமி மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார். அந்த இடத்தில் கருப்பசாமி வீடு கட்டி தீர்வை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே, அந்த இடத்துக்கு தனிப்பட்ட கோரி கருப்பசாமி விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வரும் கடையநல்லூர், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் மாரிராஜ் ( 36 வயது) என்பவரை சந்தித்து கேட்ட போது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, இடைத்தரகரான கடையநல்லூர், கம்பனேரியை சேர்ந்த ராஜா மகன் ஜெகதீஷ் ( 23 வயது) என்பவர், கருப்பசாமியின் வீட்டுக்கு சென்று இடத்தை பார்வையிட்டதுடன், விண்ணப்பத்தில் சர்வே எண் தவறாக இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க கூறியுள்ளார். அதன்படி, கருப்பசாமி மீண்டும் பட்டாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சர்வேயர்
அதன்படி, கடந்த 8- ஆம் தேதி கருப்பசாமியின் இடத்தை சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் அளவீடு செய்தனர். தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் தந்தால்தான் வரைபடம் தயார் செய்து தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு, கருப்பசாமி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர், நேற்று வியாழக்கிழமை கருப்பசாமியை தொடர்பு கொண்ட ஜெகதீஷ் பணம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, அவ்வளவு பணம் இல்லை என்றும் குறைத்துக் கொள்ளுமாறும் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கந்துவட்டி கொடூரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக பேட்டி அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை.. திருவொற்றியூரில் பரபரப்பு!!




ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போலீஸ்
இதில், பேரம் பேசப்பட்டு இறுதியாக ரூ. 4 ஆயிரம் தர வேண்டும் என்று ஜெகதீஷ் கறாராக தெரிவித்துள்ளார். இதனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பசாமி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சர்வேயர் மாரிராஜிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வேயரிடம், கருப்புசாமி லஞ்ச பணத்தை கொடுத்தார்.
சர்வேயரை அதிரடியாக கைது செய்த டிஎஸ்பி தலைமையிலான போலீஸ்
அப்போது, இந்த பணத்தை ஜெகதீஷிடம் கொடுக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில், அவரிடம் கருப்பசாமி லஞ்ச பணத்தை கொடுத்த நிலையில், அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!