கந்துவட்டி கொடூரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக பேட்டி அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை.. திருவொற்றியூரில் பரபரப்பு!!
Chennai Tiruvottiyur Murder: சென்னை திருவொற்றியூரில் காவல் ஆய்வாளர் மற்றும் எதிர் தரப்பினர் மீது கொலை மிரட்டல் புகார் கூறிய 29 வயது இளைஞர் பிரதீப்ராஜ் மறுநாளே வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொடூரக் கொலை அரங்கேறிய நிலையில், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை, செப்டம்பர் 10: சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்ராஜ் (29). சினிமா துறையில் துணை நடிகராகப் பணியாற்றி வந்த இவர், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘சிகப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தில் பைக் ரேசராக நடித்தவர் ஆவார். இந்நிலையில், பணப் பரிவர்த்தனை தொடர்பான கந்துவட்டி தகராறு மற்றும் காவல் நிலைய ஆய்வாளரின் மிரட்டல் புகாருக்கு நடுவே, பிரதீப்ராஜ் பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் கொடூரம்.. மாமனாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மருமகன்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!
வட்டிக்கு பணம் வாங்கியதில் தகராறு:
பிரதீப்ராஜின் தாய் டில்லி ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் தெரிந்தவர்களுக்காக ரூ.3 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கித் கொடுத்துள்ளார். இதற்காக வட்டியாக மட்டுமே சுமார் ரூ.18 லட்சம் வரை செலுத்திவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அசல் தொகையையும் கேட்டு நவநீதம் தரப்பு டில்லி ராணியை வற்புறுத்தி வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நவநீதம் தரப்பு அளித்த பாலியல் புகாரின் பேரில் பிரதீப்ராஜை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். ஆனால், குற்றச்சாட்டு நிரூபணமாகாததால், தினமும் காலை மற்றும் மாலை வேளையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
காவல்நிலையத்தில் வைத்து மிரட்டல்:
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் கையெழுத்திடும் கெடு முடிந்த நிலையிலும், திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரதீப்பை அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் தன்னை அடித்துத் தள்ளி, “உன்னைச் சுட்டுச் சாவடித்து விடுவேன், கை கால்களை உடைப்பேன், துண்டு துண்டாக வெட்டித் திருச்செந்தூர் கடலில் கரைப்பேன்” என்று மிரட்டியதாகவும், வழக்கறிஞரைக் கூட்டி வந்ததற்காகத் தன் மீது பொய் வழக்கு போட உத்தரவிட்டதாகவும் பிரதீப்ராஜ் காவல் நிலைய வளாகத்திலேயே செய்தியாளர்களிடம் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!
மறுநாளே பிரதீப்ராஜ் படுகொலை:
செய்தியாளர் சந்திப்பு நடத்திய அடுத்த நாளே, திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பிரதீப்ராஜை, நவநீதத்தின் மகன் நவீன்குமார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் உடலைப் பார்த்து கதறிய தாய் டில்லி ராணி, “இன்ஸ்பெக்டரும் நவீனும்தான் என் மகனைக் குருவியைச் சுடுவது போல் சுட்டுவிடுவேன் என்றும், கடலில் கரைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார்கள்” என இந்த கொலைக்குக் காவல் ஆய்வாளரே முக்கிய காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் திருவொற்றியூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.