AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?.. டி.டி.வி. தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TTV Dhinakaran Announces Support: வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளிக்கும் என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், விஜய் தலைமையிலான அரசு நிர்வாகத் திறனற்று 'துக்ளக் பாணி' ஆட்சியை நடத்துவதாகவும் அவர் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?.. டி.டி.வி. தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டிடிவி தினகரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Sep 2026 11:08 AM IST

சென்னை, செப்டம்பர் 10: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமது கட்சியின் முக்கிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டணியில் நிலவும் சூழல்கள் மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் தேசியக் கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதோடு, தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க: சிறுமி ஹாசினி படுகொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

அதிமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.டி.வி.தினகரன், “நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஏற்கனவே அண்ணா திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் விசுவாசமாக இல்லாமல், ஆளும் கட்சியை நோக்கிச் சென்றுவிட்டனர். எனவே, அந்தத் தொகுதிகளில் அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களோடு இணைந்து உறுதியாகப் பணியாற்றிப் போராடும்” என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு:

தொடர்ந்து தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்துப் பேசிய அவர், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கடுமையாகச் சாடினார். “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அரிசி, துவரம்பருப்பு, மளிகைப் பொருட்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. சாதாரண அரிசி முதல் கொப்பம்பட்டி அரிசி வரை அனைத்து ரகங்களின் விலையும் கேள்விப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக அரசுமுறை வெளிநாட்டு பயணம்.. இன்று இரவு பயணிகள் விமானத்தில் லண்டன் பறக்கும் முதல்வர் விஜய்..

‘துக்ளக் பாணி’ ஆட்சியாக தொடரும் தவெக:

மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை விமர்சித்த அவர், “இது அனுபவமற்ற மற்றும் மக்கள் விரோத அரசாங்கம். பொதுமக்கள் ஏதோ மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டார்கள். இது தமிழ்நாட்டுக்கு ஒரு இருண்ட காலம்” என்று குறிப்பிட்டார். சட்டமன்றப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்துப் பேசுகையில், சென்னை சாந்தோம் பகுதி அதிக நெரிசல் நிறைந்த பகுதி என்றும், அங்குப் பள்ளி, தேவாலயம் மற்றும் மீனவப் பகுதிகள் உள்ள சூழலில் ஒன்-வே அமைத்து மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், சொந்த விருப்பங்களுக்காக எடுக்கப்படும் முடிவுகளால் இது ஒரு ‘துக்ளக் பாணி’ ஆட்சியாகவே செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Follow Us