அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொடரும் அவதி.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை..
சீரமங்கலம்–பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், நகரம் சன்னதி பிரிவு சாலை அருகே காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மின்சாரம் இல்லாததால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிசத்தில் சிகிச்சை அளித்துள்ளனர்.
செப்டம்பர் 10, 2026: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை காரணமாக, காயமடைந்து சிகிச்சைக்கு வந்த இளைஞருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தலைநகர் சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் மின்வெட்டு:
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் சீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை காரணமாக செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க: “அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!
செப்டம்பர் 9ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில், சீரமங்கலம்–பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், நகரம் சன்னதி பிரிவு சாலை அருகே காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் காயமடைந்த அவருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை:
அப்போது மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் இல்லாத நிலையில், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தி காயமடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: சிறுமி ஹாசினி படுகொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!
மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவை வழங்கும் இடத்திலேயே மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.