AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக அரசுமுறை வெளிநாட்டு பயணம்.. இன்று இரவு பயணிகள் விமானத்தில் லண்டன் பறக்கும் முதல்வர் விஜய்..

CM Vijay London Visit: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக இன்று லண்டன் புறப்படுகிறார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையவும், புதிய பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குழு பங்கேற்கிறது.

முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக அரசுமுறை வெளிநாட்டு பயணம்.. இன்று இரவு பயணிகள் விமானத்தில் லண்டன் பறக்கும் முதல்வர் விஜய்..
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Sep 2026 07:22 AM IST

சென்னை, செப்டம்பர் 10: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பிரம்மாண்ட இலக்கை நோக்கி உயர்த்த தமிழக வெற்றிக் கழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுப் பன்னாட்டு நிறுவனங்களின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக இன்று (வியாழக்கிழமை) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். தமிழகத்தில் புதிதாக தவெக ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதால் அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: தவெக வேட்பாளர்கள்… இந்த இருவருக்கு தான் மீண்டும் வாய்ப்பு.. நாளை பட்டியல் வெளியீடு?

பயணிகள் விமானத்தில் செல்லும் முதல்வர்:

சமீபத்தில் நிறைவடைந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இந்தப் பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் முதலமைச்சர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதன்படி, இன்று இரவு 10 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், ‘எமிரேட்ஸ்’ பயணிகள் விமானம் மூலம் முதற்கட்டமாக துபாய் சென்றடைகிறார். அங்கிருந்து அதிநவீன விமானத்தின் முதல் வகுப்பில் பயணம் செய்து லண்டன் நகரைச் சென்றடைகிறார். பொதுவாக, மாநில முதலமைச்சர்கள் அல்லது முக்கியத் தலைவர்கள் வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளும்போது தனி விமானங்களை பயன்படுத்துவதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு மாறாக முதலமைச்சர் விஜய் சாதாரண பயணிகள் விமானத்தைப் பயன்படுத்திப் பயணம் மேற்கொள்வது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

லண்டனில் முதலீட்டாள்களுடன் சந்திப்பு:

தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 110-க்கும் மேற்பட்ட நாட்களில், 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1,02,514 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்குச் சென்று கார் உற்பத்தி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பிலும் அமைச்சர் கீர்த்தனா மற்றும் ஏற்கனவே அங்குச் சென்றுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்கின்றனர். லண்டனில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருக்கும் முதலமைச்சர் விஜய், அங்குள்ள பல்வேறு முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குக் நிலவும் சாதகமான சூழலை எடுத்துரைத்து, மாநிலத்திற்குப் புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார்.

இதையும் படிக்க: தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்.. முக்கோணப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?.. கள நிலவரம் என்ன?

நடிகர் அஜித்குமாரை சந்திக்க வாய்ப்பு:

ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகத்திற்கு கூடுதல் தொழில் வாய்ப்புகளைக் கொண்டு வருவது அவசியமாகிறது. இதற்காக லண்டன் நகரில் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் விஜய், அங்குப் பல்வேறு தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார். மேலும், லண்டன் பயணத்தின் மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வாக, அங்குத் தங்கியிருக்கும் காலத்தில் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள பிரபல நடிகர் அஜித்குமாரை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு வார கால தீவிர முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் அரசுமுறைச் சந்திப்புகளுக்குப் பிறகு, வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் லண்டனிலிருந்து புறப்பட்டுத் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us