“அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!
MK Stalin Video Response to CM Vijay: சட்டமன்றத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் தனது சிறை வரலாறு குறித்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். மிசா காலத்தில் தான் சந்தித்த சித்திரவதைகள், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்து விளக்கமளித்துள்ள அவர், முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, செப்டம்பர் 10: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அண்மையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் மக்கள் மத்தியிலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சட்டமன்றத்தில் தனது சிறை வாழ்க்கை, மிசா கால நிகழ்வுகள் மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரிவான காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவாழ்வில் போராட்டங்களைச் சந்திப்பதும், அதற்கான விளைவுகளை எதிர்கொள்வதும் திமுகவுக்குப் புதியதல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சி நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக அரசுமுறை வெளிநாட்டு பயணம்.. இன்று இரவு பயணிகள் விமானத்தில் லண்டன் பறக்கும் முதல்வர் விஜய்..
மிசா காலச் சிறைக் கொடுமைகள்:
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
தனது காணொளிப் பதிவில் எமர்ஜென்சி மற்றும் மிசா கால நினைவுகளைப் பகிர்ந்த மு.க.ஸ்டாலின், 1976-ஆம் ஆண்டு எமர்ஜென்சியை எதிர்த்து மெரினா கடற்கரையில் தலைவர் கலைஞர் நடத்திய மாபெரும் கூட்டத்திற்குப் பிறகு, ஒன்றிய அரசு திமுக ஆட்சியைக் கலைத்ததாக நினைவுகூர்ந்தார். ஆட்சியைக் கலைத்த கையோடு தன் மீது மிசா பாய்ந்ததையும், கைது நடவடிக்கையின் போது நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்ட அவர், சிறையில் 10 பேரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாகத் தெரிவித்தார். இரவில் தூங்க விடாமல் லத்தியால் அடித்ததும், கால்களால் மிதித்ததும், அந்தத் தாக்குதலில் சிட்டி பாபு உயிரிழந்ததும் வரலாற்று உண்மை என்று சுட்டிக்காட்டினார். தாடை எலும்பு உடைந்ததன் தழும்புகள் இன்னமும் உடலில் இருப்பதாகக் கூறிய அவர், தங்களை யார் கொச்சைப்படுத்த நினைத்தாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும், சந்தேகம் இருந்தால் சட்டமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் படித்துப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள்:
சர்க்காரியா கமிஷன் மற்றும் தலைவர் கலைஞர் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு மத்தியில் எத்தனையோ ஆட்சிகள் மாறியும் கூட எந்தக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அரசியல் காரணங்களுக்காகக் காலங்காலமாகக் கூறப்பட்டு வந்த பொய்களையே தற்போதும் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்றார். அதேபோல, அமலாக்கத்துறை செலுத்திய கடிதங்களைக் கொண்டு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது குறித்துக் குறிப்பிடுகையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட வழக்குகளில் 95 சதவீதம் வரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டவையே என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவே அந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்றும் சாடினார்.
இதையும் படிக்க: தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்.. முக்கோணப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?.. கள நிலவரம் என்ன?
ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனம்:
முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கேள்விகளை எழுப்பிய மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருப்பதை நினைவூட்டினார். மக்கள் நலத் திட்டங்கள், சட்ட ஒழுங்கு, மாநில உரிமைகள் போன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேவையற்ற சர்ச்சைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், முதல்வராக பதவியேற்ற பிறகு தன்னைச் சந்திக்க தனது இல்லத்திற்கு வந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக விமர்சித்து பேசிவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்ததை நினைவுகூர்ந்த அவர், முதலமைச்சருக்குரிய கண்ணியத்தோடும், உடல்மொழியோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தங்களின் அரசு ரீல்ஸ் போடுவதிலும், பாலங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுப்பதிலுமே கவனம் செலுத்தி ஆட்சி நிர்வாகத்தைச் சினிமா படப்பிடிப்பு போல நடத்துவதாகவும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது, விவசாயக் கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.