தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல்.. முக்கோணப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?.. கள நிலவரம் என்ன?
Dharapuram Assembly By-Election: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்தியபாமா தவெகவில் இணைந்தது, அருந்ததியர் சமூக வாக்கு வங்கியின் முக்கியத்துவம் மற்றும் திமுக-அதிமுக-தவெக இடையேயான மும்முனைப் போட்டி ஆகியவை இத்தொகுதியின் வெற்றித் தீர்மானிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.
திருப்பூர், செப்டம்பர் 10: தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைவரின் பார்வையும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. வரலாற்று ரீதியாகவும், சமூக அமைப்பின் ரீதியாகவும் பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய தாராபுரம் தொகுதி, இந்த இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் புதிதாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான அரசியல் களமாக மாறியுள்ளது. கடந்த கால தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய கள நிலவரங்களின் அடிப்படையில், இத்தொகுதியில் நிலவும் புதிய அரசியல் சூழல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!
சம வெற்றி பதிவு செய்த அதிமுக, திமுக:
தாராபுரம் தொகுதியின் கடந்த கால வரலாற்றை உற்றுநோக்கினால், 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் இருந்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் இத்தொகுதியில் சம அளவிலான வெற்றிகளையே பதிவு செய்துள்ளன. குறிப்பாக, கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களைக் கணக்கில் கொண்டால், அதிமுக இரண்டு முறையும், திமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி செல்வராஜ், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வேட்பாளராகும் சத்யபாமா:
தற்போதைய இடைத்தேர்தல் சூழலில், இத்தொகுதியின் அரசியல் கணக்குகள் முற்றிலும் மாறியுள்ளன. இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா, அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் சத்தியபாமாவே வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெகவுக்கு, இந்த தாராபுரம் இடைத்தேர்தல் தங்களது அரசியல் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
விசிகவுக்கு வாங்கு வங்கி இல்லை:
தாராபுரம் தொகுதியின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் முதன்மை காரணியாக விளங்குவது அருந்ததியர் சமூக வாக்குகள் ஆகும். இத்தொகுதியில் உள்ள மொத்தம் 2.22 லட்சம் வாக்காளர்களில், சுமார் 70,000 வாக்குகள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவைகளாக உள்ளன. பாரம்பரியமாக இந்த அருந்ததியர் சமூக வாக்குகள் அதிமுகவிற்கே அதிகளவில் பதிவாகி வந்துள்ளன. அதேவேளையில், பட்டியலின மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவிலான தனித்துவமான வாக்கு வங்கியோ அல்லது பெரிய அளவிலான களச் செல்வாக்கோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிக்க: தவெக தலைமையில் உருவானது புதிய கூட்டணி.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைப்பு..!
கடும் போட்டியை சந்திக்கும் களம்:
ஒருபுறம் தவெக தனது செல்வாக்கை நிருபிக்கத் துடிக்கும் வேளையில், மறுபுறம் பாரம்பரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள அதிமுகவும், ஆளும்கட்சியான திமுகவும் தங்களது அரசியல் பலத்தைக் காட்ட அனைத்து உத்திகளையும் கையாண்டு வருகின்றன. அருந்ததியர் சமூக வாக்குகளைக் கவரும் கட்சியே தாராபுரம் தொகுதியின் புதிய பிரதிநிதியைத் தீர்மானிக்கும் என்பதால், இந்த இடைத்தேர்தல் களம் முன்னெப்பழுதும் இல்லாத வகையில் கடும் போட்டியைச் சந்தித்துள்ளது.