சிறுமி ஹாசினி படுகொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!
சிறுமி ஹாசினி பாலியல் படுகொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தை உச்ச நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய சீராய்வு (Curative Petition) மனு தாக்கல் செய்துள்ளது. கடைசிக் கட்ட முயற்சியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, செப்டம்பர் 10: சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்தை உச்ச நீதிமன்றம் விடுவித்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!
சிறுமி பாலியல் வன்கொடுமை:
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி – பாபு தம்பதியின் 6 வயது மகள் ஹாசினி, கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி காணாமல் போனார். விசாரணையில், குன்றத்தூரைச் சேர்ந்த 22 வயதான தஷ்வந்த் என்ற வாலிபர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றார். ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், 2017 டிசம்பர் 2-ஆம் தேதி செலவுக்குப் பணம் தராத ஆத்திரத்தில் தனது தாய் சரளாவையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்.
மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்:
ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018 பிப்ரவரி 19-ஆம் தேதி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், டி.என்.ஏ பகுப்பாய்வு அடிப்படையில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தஷ்வந்திற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் கொடூரம்.. மாமனாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மருமகன்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!
தமிழக அரசு புதிய மனு தாக்கல்:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் 2025 நவம்பர் மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கடைசி வாய்ப்பாகத் தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.