“கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை!”.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!
Kolathur MLA VS Babu Health Update: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 10: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான 75 வயதான வி.எஸ்.பாபு, திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது தற்போதைய சுகாதார நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!
தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு:
Kolathur MLA V. S. Babu is admitted to MGM Healthcare, Chennai, with a respiratory ailment. He is under specialist care in the Critical Care Unit receiving respiratory support. His condition is presently stable and under close monitoring.#Kolathur #VSBabu #TVK pic.twitter.com/edf21BevYx
— Janardhan Koushik (@koushiktweets) September 10, 2026
சென்னையின் அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவுக்கு, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அவருக்கு ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தேவையான மருத்துவ மேலாண்மை சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உடல்நிலை சீரான நிலையில் உள்ளது:
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்றவர்:
நடந்து முடிந்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, மிகக் கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மக்களிடையே தொடர்ந்து களப்பணியாற்றி வந்த அவர், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சிறுமி ஹாசினி படுகொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!
மருத்துவனையில் திரண்ட ஆதரவாளர்கள்:
வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரவியதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் கூடி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.