இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!
DMK Wins TVK Govt Collapse : தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் தமிழ க வெற்றிக் கழக அரசு கவிழும் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி சூளுரைத்து உள்ளார் .
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பங்கேற்று பேசியதாவது: மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுவது பரந்தாமன் இல்லை. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தான். இவருக்கும், மதுராந்தகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த தொகுதி மக்களின் முகத்தில் எதிர்ப்பும், கோபமும் இருப்பது நன்றாக தெரிகிறது. மிசா பற்றி தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. எங்களைப் போன்ற 80 வயதை கடந்த நபர்களுக்கு தான் மிசாவின் கொடுமை என்றால் என்ன என்பது தெரியும். தற்போதைய சூழலில் மிசாவை பற்றி மு.க. ஸ்டாலின், டி. ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில் தான் தொடங்கியது
ஆனால், யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியுள்ளார். நமது தலைவரை பற்றி பேசிய அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க இடைத்தேர்தல் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் வேறு எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காமல் மதுராந்தகம் தொகுதி கட்சியினருக்கு கிடைத்துள்ளது. மிசா- வரலாறு முதல் முதலாக மதுராந்தகம் தொகுதியில் தான் தொடங்கியது. அதன்படி, இந்த தொகுதியில் நிச்சயம் பரந்தாமன் வெற்றி பெறுவார்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!




திமுக வெற்றி பெற்றால் தவெக அரசு கவிழ்ந்து விடும்
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றால், வருகிற ஜனவரி மாதத்துக்குள் தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் பேசுகையில், மதுராந்தகம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி விழா, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
திமுக நிச்சயம் வெற்றி பெறும் என சூளுரை
தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை பதிவு செய்வதற்காக திமுக சார்பில் பரந்தாமன், சுகன்யாவும், அதிமுக சார்பில் கணிதா சம்பத், பானுமதியும், தவெக சார்பில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் திமுக- தவெக இடையே மோதல் போக்கு தீவிரமாக இருந்து வரும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆர். எஸ். பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!