400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை அதிரடி ரத்து – என்ன காரணம்?
TN Onion Purchase Cancelled : தரமற்றதாக இருந்ததால், நாஃபெட்டிடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகக் கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னை கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ள தரமற்ற வெங்காயம், மத்திய அரசு நிறுவனமான நாஃபெட்டுக்கு சொந்தமானது என விளக்கமளித்துள்ளது.
சென்னை, நவம்பர் 3 : சென்னை கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ள தரமற்ற வெங்காயம், மத்திய அரசு நிறுவனமான நாஃபெட்டுக்கு சொந்தமானது என்றும், அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல என்றும் தமிழகக் கூட்டுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. தரமற்றதாக இருந்ததால், நாஃபெட்டிடமிருந்து (NAFED) 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் துறை தெரிவித்துள்ளது.
400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை அதிரடி ரத்து
நாஃபெட் நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29 வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் கடந்த 2026 அக்டோபரில் ஆணைபிறப்பித்திருந்தது. அந்த ஆணையில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் முதல் தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் அடுத்த பிளான் – வெளியான வீடியோ – அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?




ஆனால், மகாராஷ்டிரா கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போதே, முதல் தர வெங்காயத்துடன் அழுகிய, நிராகரிக்கக்கூடிய தரத்திலான வெங்காயங்களும் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காயத்தை கடந்த 2026 அக்டோபர் 31 அன்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். அப்போது வெங்காய மூட்டைகளில் 20 முதல் 26 சதவீதம் வரை அழுகிய, பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக 50.2 சதவீத வெங்காயம், நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிடச் சிறியதாக இருந்தது.
இதனையடுத்து, ஆய்வு மேற்கொண்ட அக்டோபர் 31, 2026 அன்றே நாஃபெட்டுக்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை தமிழக கூட்டுறவுத் துறை ரத்து செய்தது. தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்து, நுகர்வோர் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : “தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதா?”.. ‘TN Fact Check’ கொடுத்த விளக்கம்!!
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2026 செப்டம்பர் 3 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் படி 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு அங்காடிகள் மூலம், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் படி 3 கட்டமாக, மொத்தம் 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகள் மூலம் வெங்காய விற்பனை நடைபெறவில்லை எனக் கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி, தரமில்லாமல் இருந்ததால் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்திடம் கொள்முதல் செய்த 450 டன் வெங்காயத்தை பெற்றுக் கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசும், தங்களுக்கு வெங்காயம் திருப்பி அனுப்பப்படவில்லை என அந்நிறுவனம் தரப்பிலும் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதாவது, தமிழ்நாட்டுக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை. குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியில் பாதிக்கப்படுவது மக்கள்தான். இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Take-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி ! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.