மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கான புதிய வழிக்காட்டுதல் வெளியீடு! வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை எப்படி அமைக்க வேண்டும்?
Rain Water Harvesting: அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டமைப்புகள் உள்ள இடங்களில் அவை செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்த அல்லது செயல்படாத கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 3, 2026: தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைநீரை முறையாகச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரின் அளவைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை கட்டாயம்!
அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டமைப்புகள் உள்ள இடங்களில் அவை செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்த அல்லது செயல்படாத கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்.. சொத்து குவிப்பு வழக்கில் தீவிரமடையும் விசாரணை!
மழைநீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்ப முறைகள்!
கட்டடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் வடிகட்டி, சேமிப்புத் தொட்டிகளில் சேகரிக்கலாம். சேமிப்புத் தொட்டிகள் நிரம்பிய பிறகு வெளியேறும் உபரி நீரை நிலத்தடியில் செலுத்துவதற்காக உறிஞ்சுக் குழிகள், கசிவுநீர் கிணறுகள், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. வங்கிக் கணக்கும் முடக்கம்!
தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய வளாகங்களில், நிலத்தின் தன்மை மற்றும் மழைநீர் வெளியேறும் அளவைப் பொறுத்து வளாகத்தின் சுற்றுப்புறங்களில் மழைநீர் ஊடுருவும் கிணறுகள், நீர்ச் செறிவூட்டும் கால்வாய்கள் அமைக்கலாம். போதிய இடவசதி உள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கிச் சிறிது சிறிதாக நிலத்துக்குள் செல்லும் வகையில் நீர்ச் செறிவூட்டும் குளங்களையும் அமைக்கலாம். 
சாலைகள், பூங்காக்களிலும் மழைநீர் சேகரிப்பு!
கட்டடங்கள் மட்டுமின்றி சாலைகள், பூங்காக்கள், திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களிலும் மழைநீரைச் சேகரிக்க புதிய வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்காக மழைநீர் ஊடுருவும் தரைத்தளங்கள், வடிகட்டும் அமைப்புகள், நீர்ச் செறிவூட்டும் குளங்கள் மற்றும் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம்.
பராமரிப்புக்கும் முக்கியத்துவம்!
மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்படுவதுடன் அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். மேற்கூரைகள், மழைநீர் செல்லும் குழாய்கள், வடிகட்டிகள் மற்றும் நீர்ச் செறிவூட்டும் கட்டமைப்புகளைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் முதன்மைத் துறையாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படும். மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படி புதிய கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள், ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளைப் புதுப்பித்து, மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.