20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை
Anitha Radhakrishnan Acquitted : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேரையும் விடுதலை செய்து, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் நவம்பர் 3, 2026 இன்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி, நவம்பர் 3 : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேரையும் விடுதலை செய்து, தூத்துக்குடி (Thoothukudi) முதன்மை மாவட்ட நீதிமன்றம் நவம்பர் 3, 2026 இன்று தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் முதலில் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சராகவும், பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி மதிப்பில் சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை




இதையடுத்து, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அனிதா ராதாகிருஷ்ணன் பின்னர் திமுகவில் இணைந்து, திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 பேர் மீது வழக்கு
இந்த வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் என மொத்தம் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு மே 14 முதல் 2006 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், இவர்கள் 7 பேரின் பெயர்களிலும் வாங்கப்பட்ட சொத்துகள், அவர்களின் வருமானம், செலவினங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தது.
இதையும் படிக்க : சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் அடுத்த பிளான் – வெளியான வீடியோ – அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?
வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில் 79 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 312 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர் தரப்பில் 6 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 74 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கில் நவம்பர் 3, 2026 இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 7 பேரும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி சுபா தேவி, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.