ரயிலில் பகலில் தூங்கலாமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Railway Sleeping Berth Rules : முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற இந்திய ரயில்வேயின் உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 3 : முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற இந்திய ரயில்வேயின் உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு இந்த விதியிலிருந்து ஏற்கெனவே விலக்கு உள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரயிலில் இரவு 10 முதல் காலை 6 வரை மட்டுமே தூங்க முடியும்
சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு அனுமதி உண்டு என்ற விதியைக் காரணம் காட்டி, பகல் நேரத்தில் அவரது மனைவிக்குக் கீழ் பகுதியில் உள்ள படுக்கையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி.. முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு!




இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,இந்திய ரயில்வே வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தனர். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க வேண்டும் என்ற விதி அமலில் இருந்தாலும், கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் எந்த நேரத்திலும் படுக்கையைப் பயன்படுத்தலாம் என்ற விதிவிலக்கும் ஏற்கெனவே உள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இத்தகைய விதி இருக்கும்போது, மனுதாரர் பயணத்தின்போதே ரயில்வே காவலர், பணியில் இருந்த ரயில்வே ஊழியர்களையோ அணுகி உதவி பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறு செய்யாமல் ரயில்வே விதியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மனுதாரர் ரயில்வே நிர்வாகத்தை அணுகலாம் எனத் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் உத்தரவில் குறிப்பிட்டிருப்பது என்ன?
ரயில்வே அமைச்சகம் 2017 செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையின்படி, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கைகளை விரித்து உறங்கலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான பகல் நேரத்தில், கீழ் படுக்கையில் அமர்ந்து பயணிக்க இடம் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்.. உரிய அனுமதியின்றி இயங்கிய 87 ரிசார்ட்டுகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இருப்பினும், கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு இந்த விதி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விலக்கு பெற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குப் பகல் நேரத்தில் படுக்கையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டால், பெட்டியில் பணியில் உள்ள டிக்கெட் பரிசோதகர்), ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அல்லது ரயில்வே ஊழியர்களிடம் உதவி கோரலாம். ரயில்வே உதவி எண் 139 மூலமும் புகார் அளிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.