வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! கிலோ ரூ.35க்கு விற்பனை செய்ய திட்டம்..
உற்பத்தி பகுதிகளில் இருந்து நுகர்வு மையங்களுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்லும் ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ஆம் ஆண்டில் 86 ரயில் தடங்களில் சுமார் 88,000 டன் வெங்காயம் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நடப்பு ஆண்டில் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு முதல் கந்தா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27.2026: வரும் மாதங்களில் வெங்காயத்தின் போதுமான இருப்பை உறுதி செய்து, பருவகால விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், இடையக இருப்பில் உள்ள வெங்காயத்தைத் தேவைக்கேற்ப படிப்படியாகவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என இரு வழிகளிலும் வெங்காயம் முக்கிய நுகர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
1.21 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்:
2025-26ஆம் ஆண்டில் வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 307.67 லட்சம் டன் உற்பத்திக்கு நிகரானதாகும். உற்பத்தி மற்றும் இருப்பு போதுமான நிலையில் இருப்பதால், 2026-27ஆம் ஆண்டுக்கான விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் 2 லட்சம் டன் ரபி பருவ வெங்காயத்தை கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்கான கொள்முதல் மே 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 1.21 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெங்காயத்தை சேமித்து நிர்வகிப்பதற்காக மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் முதல் முறையாக சேமிப்பு நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் திருமண காலங்களில் தேவை அதிகரிப்பதால் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய திட்டம்:
இதையடுத்து, இடையக இருப்பில் இருந்து வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலமும், சஃபல் மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை நடைபெறும். NCCF சார்பில் 9 விற்பனை நிலையங்கள், 40 நடமாடும் வாகனங்கள், NAFED சார்பில் 13 விற்பனை நிலையங்கள், 50 நடமாடும் வாகனங்கள், மேலும் சுமார் 100 கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கந்தா ரயில் மூலம் வெங்காய விற்பனை:
இதேபோல், உற்பத்தி பகுதிகளில் இருந்து நுகர்வு மையங்களுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்லும் ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ஆம் ஆண்டில் 86 ரயில் தடங்களில் சுமார் 88,000 டன் வெங்காயம் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நடப்பு ஆண்டில் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு முதல் கந்தா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திடீர் வெள்ளம்.. நேபாள பிரதமரிடம் நிலைமையை விசாரித்த பிரதமர் மோடி
சாலை வழியாக சென்னை, கொல்கத்தா, எர்ணாகுளம், கவுகாத்தி, வாரணாசி, லக்னோ, பாட்னா, சண்டிகர், ஜம்மு மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது.
3.82 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி:
இதற்கிடையே, ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரை சுமார் 3.82 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
நாடு முழுவதும் 579 மையங்களில் 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தினசரி கண்காணித்து வருகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.37.87 ஆக உள்ளது. தக்காளி ரூ.38.33, உருளைக்கிழங்கு ரூ.22.63, துவரம் பருப்பு ரூ.123.30 என விற்பனை செய்யப்படுகிறது. விலையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.