ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை.. இல்லையென்றால் வலுவான போராட்டம்.. ஆட்டோ – டாக்சி சங்கம் அறிவிப்பு!
Auto Rickshaw Workers Union Protest Announcement | ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி மனு வழங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 28, 2026 அன்றுக்குள் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் ஆகஸ்ட் 29, 2026 அன்று மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என ஆட்டோ - டாக்சி சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 27 : ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக ஆட்டோ – டாக்சி தொழிலாளர் சங்கம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெங்காயம், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கட்டண உயர்வை வலியுறுத்தி ஆட்டோ – டாக்சி சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த போராட்ட அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை
ஆட்டோ – டாக்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று (ஆகஸ்ட் 27, 2026) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து, அதை மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நேபாளத்தை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் விவரம்..!




1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60 கட்டணம்
போக்குவரத்து அமைச்சர் தலைமயில் ஆகஸ்ட் 09, 2026 அன்று கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நாங்கள் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60 மற்றும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 காத்திருப்பு கட்டணமாக ரூ.1 மற்றும் இரவு நேர காத்திருப்பு கட்டணமாக ரூ.1.50 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விரிவான மனு அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கிறோம். இல்லையெனில் ஆகஸ்ட் 29, 2026 அன்று அனைத்து சங்கங்களும் கூடி வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.