முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
CM Vijay Photographs Corruption : தமிழ க முதல் அமைச்சர் புகைப்படத்தை வாங்கியதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து உள்ளது .
தமிழகத்தில் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படங்களை ரூ.800- க்கு வாங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ் வழக்கு தொடுத்துள்ளார். இதில், திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக ராகவ் பாலாஜி பணியாற்றி வருகிறார். இவர், பொறுப்பேற்றது முதலே கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலர்களையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பணி புரியும் ஊழியர்களையும் மிரட்டி மாதம் தோறும் கையூட்டு பெற்று வருகிறார். தற்போது, ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் தமிழக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துக்கான சந்தை மதிப்பு விலையை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடு செய்து வருகிறார்.
உரிய விசாரணை- நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்
இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்த கோரி மனு அளித்திருந்தேன். ஆனால், அந்த மனு குறித்து கீழ்நிலை அதிகாரி விசாரணை மேற்கொள்ளுமாறு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரு உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால், அவருக்கு கீழ் உள்ள அதிகாரியை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்த விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும். எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்க தலைமை பதிவாளர் தலைமையில் உரிய விசாரணை நடத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!




கூடுதல் பதிவாளர் விசாரணை நடத்த உத்தரவு
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி விக்டோரியா கௌரி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமன ம் செய்து புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும், முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் படம் வாங்கியதிலேயே ஊழல்
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல் ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து வருகிறது. அந்த வகையில், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், அவர் புகைப்படத்திலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: மரியவில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!