ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் பரவலான தொடர் கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக மாறி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கமாக வெண்ணிறமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி, தற்போது மழை வெள்ளம் காரணமாக செந்நிறமாக மாறி, மிகுந்த சீற்றத்துடன் கீழ்நோக்கி பாய்கிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் பரவலான தொடர் கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக மாறி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வருகிறது. வழக்கமாக வெண்ணிறமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி, தற்போது மழை வெள்ளம் காரணமாக செந்நிறமாக மாறி, மிகுந்த சீற்றத்துடன் கீழ்நோக்கி பாய்கிறது. வறட்சி காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கொல்லிமலையில் தீவிரமாக பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்வரத்து மற்றும் வெள்ளத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்வதற்கும், குளிப்பதற்கும் வனத்துறையினர் தற்காலிகத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
