இந்தியாவின் விண்வெளித் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று உருவாகி வருகிறது. இனி வரும் ஆண்டுகளில், ராக்கெட்டுகள் மற்றும் வழக்கமான செயற்கைக்கோள்களை தயாரிப்பதில் இருந்து இஸ்ரோ படிப்படியாக விலகி, ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான விண்வெளி திட்டங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளது. அதாவது, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இனி மேலும் அதிகரிக்க உள்ளது. இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுதான். தற்போது சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை, 2033ஆம் ஆண்டுக்குள் 44 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இதுகுறித்து பிசினஸ் டுடே நடத்திய இந்தியா அட் 100 எகானமி சம்மிட்டில் பேசிய இன்ஸ்பேஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா, இந்த மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இஸ்ரோ எந்த ராக்கெட்டையும் தயாரிக்காது என்றும், ராக்கெட் தயாரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான முதல் முக்கியமான நடவடிக்கையாக, ஸ்மால் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் எனப்படும் எஸ்.எஸ்.எல்.வி.யின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உரிமைகள் ஏற்கனவே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக, இந்தியாவின் முக்கியமான ராக்கெட்டுகளான போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் எனப்படும் பி.எஸ்.எல்.வி. மற்றும் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த செயல்பாட்டு ராக்கெட்டான எல்.வி.எம்.3 ஆகியவற்றின் உற்பத்தியும் தனியார் துறைக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.