நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 37 தமிழர்கள்.. மீட்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை..
Nepal Flood: தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக அரசு தரப்பில் 37 முதல் 50 பேர் வரை தொடர்பு இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் தென்னரசு, தமிழக அரசின் கண்காணிப்பு மையத்திடம் அளித்த தகவலின்படி, நான்கு சுற்றுலாக் குழுக்களில் மொத்தம் 106 பேர் நேபாளத்துக்குச் சென்றுள்ளனர்.
ஆகஸ்ட் 27, 2026: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த குறைந்தது 37 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள் பயணிக்கும் முக்கிய வழித்தடத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அவர்களுடன் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு:
நேற்று காலை சுமார் 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் போடேகோஷி ஆற்றில் கலந்தது. இதனால் நேபாளத்தின் ராசுவா பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 500 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களில் 105 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் அடங்குவர். குறைந்தது 59 இந்தியர்கள் கைலாஷ் யாத்திரை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன 37 தமிழர்களின் நிலை என்ன?
இதற்கிடையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக அரசு தரப்பில் 37 முதல் 50 பேர் வரை தொடர்பு இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் தென்னரசு, தமிழக அரசின் கண்காணிப்பு மையத்திடம் அளித்த தகவலின்படி, நான்கு சுற்றுலாக் குழுக்களில் மொத்தம் 106 பேர் நேபாளத்துக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 57 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்தின் மூலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி புறப்பட்டுள்ளனர். மேலும் 49 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
இந்த நான்கு குழுக்களில் இரண்டு குழுக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், மற்ற இரண்டு குழுக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் குழுவில் 36 பெண்கள், 21 ஆண்கள் என மொத்தம் 57 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 20 பேர், 11 பெண்கள் உட்பட, பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
17 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆடியோ பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் மூன்று பேருந்துகளில் பயணித்ததாகவும், ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக உறுதி செய்யப்படாத தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை – அமைச்சர் வினோத்:
இதனிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்ன? கேள்வி நேரம் முதல் மானியக் கோரிக்கை வரை என்ன நடக்கும்?
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் காணாமல் போயிருப்பதாகவும், சிலர் சிக்கியிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தூதரகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் நிலை குறித்து தகவல்களைப் பெற 24 மணி நேர உதவி எண்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமும் மீட்பு மற்றும் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.