AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தொடக்க தேதி மாற்றம் – செப்டம்பர் 22 முதல் அமல்!

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 36,341 மாணவர்கள் பயன்பெற இருக்கின்றனர் என அமைச்சர் ஜகதீஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தொடக்க தேதி மாற்றம் – செப்டம்பர் 22 முதல் அமல்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 16 Sep 2026 16:35 PM IST

செப்டம்பர் 16, 2026: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடக்க விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சென்னையிலிருந்து செப்டம்பர் 10ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார். இந்தச் சூழலில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத்திட்டம் தொடக்க விழா தேதியில் மாற்றம்:

செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சரின் லண்டன் பயணத்தின் காரணமாக, தற்போது வரக்கூடிய செப்டம்பர் 22ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 29 மா.செக்கள் ஆப்சென்ட்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், இந்தக் காலை உணவு திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் கூடுதல் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

15,910 பள்ளிகளில் அமல்படுத்தப்படும் காலை உணவுத்திட்டம்:

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 36,341 மாணவர்கள் பயன்பெற இருக்கின்றனர் என அமைச்சர் ஜகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “கூட்டணி பற்றிப் பேச செல்வப்பெருந்தகை யார்?”.. பொங்கிய பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.. வெடித்தது புது சர்ச்சை!!

அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us