அடுத்த ஆண்டு முதல் சிலைகள் இயற்கை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..
Ganesh Statue Immersion: தமிழக அரசு தரப்பில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குறுகிய காலமே இருப்பதால் மாற்று இடங்களை ஏற்பாடு செய்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த ஆண்டு பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு முதல் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 17, 2026: அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க மாட்டோம் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, 3, 5, 7 நாட்களுக்குப் பிறகு சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். வீடுகளில் வைத்து வழிபடப்படும் சிலைகள் 3-வது நாளில் அருகில் உள்ள நீர்நிலைகளில் அல்லது விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் கரைக்கப்படுகின்றன.
பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதனால் நீர்நிலைகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விநாயகர் சிலை கரைக்கும் விவகாரம் – தமிழக அரசு சொன்ன பதில்:
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் மற்றும் உறுப்பினர் பிரசாத் கார்க் முன்னிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடலில் சிலை கரைக்கலாமா? இதை படிங்க!
அப்போது தமிழக அரசு தரப்பில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குறுகிய காலமே இருப்பதால் மாற்று இடங்களை ஏற்பாடு செய்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த ஆண்டு பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு முதல் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக குளங்கள் அமைக்க மனுதாரர் கோரிக்கை:
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை மட்டுமின்றி ஒட்டுமொத்த கடற்கரை பகுதிகளிலும் அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். மேலும், தற்காலிக குளங்களை உருவாக்கி அதில் சிலைகளை கரைத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், சிலைகள் கரைப்பதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
மேலும் படிக்க: கோலகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..
அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கக்கூடாது:
விசாரணையின் முடிவில், அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் விதிகள் பின்பற்றப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று உத்தரவாதப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.