தமிழ்நாட்டில் டெங்கு பரவல் எச்சரிக்கை.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு!
TN Govt Dengue Alert: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கவும், 24 மணி நேரமும் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 17: தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்து வரும் பருவமழை காரணமாகவும், தற்போதைய காலநிலை மாற்றத்தினாலும் டெங்கு காய்ச்சலின் பரவல் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தடையின்றி வழங்குவதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள்:
தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனியாகச் சிறப்பு வார்டுகளை உடனடியாக அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான காய்ச்சல் மருந்துகள், இரத்தத் தட்டணுக்கள் (Platelets) ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றிப் போதிய அளவில் கிடைப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்கள்:
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவலான மழை காரணமாகச் சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்ற இடங்களை விட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு செப்டம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2,600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாகச் சென்னையில் 726 பேரும், கோவையில் 200 பேரும், திருவள்ளூரில் 700 பேரும், கடலூரில் 700 பேரும், செங்கல்பட்டில் 500 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,476 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மாதத்திலும் பரவல் தொடர்வதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி விவகாரம்: பொதுவான கருத்துக்கு தவெகவினர் கொந்தளிப்பது ஏன்?.. சீமான் சரமாரி கேள்வி!!
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்:
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்றும், அதேவேளையில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகங்களில் சுய மருத்துவம் பார்த்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகிப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைச் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தி தடுப்புப் பணிகளும் தீவிரமாக முடுக்கவிடப்பட்டுள்ளன.