AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம் – பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி..

Selvaperunthagai vs Praveen Chakravarthy: “உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம் – பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Sep 2026 20:31 PM IST

செப்டம்பர் 16, 2026: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொடர்ந்து உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வப்பெருந்தகை கூறுகையில், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தேவையில்லை. அப்படி ஏற்காவிட்டால் கூட்டணி எதற்கு?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார்?

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, கூட்டணி முடிவுகள் குறித்தோ அல்லது கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்தோ பேசுவதற்கு செல்வப்பெருந்தகை யார் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், கூட்டணி விவகாரங்களை முடிவெடுப்பது தலைமைதான் என்றும், சமீபத்தில் தோழமைக் கட்சிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் மிகவும் சுமூகமாகவும் மகிழ்ச்சியாகவும் விவாதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

உழைக்காமல் கிடைத்த பதவி – பிரவீன் சக்கரவர்த்தி:


இந்நிலையில், செல்வப்பெருந்தகை பிரவீன் சக்கரவர்த்திக்கு பதில் அளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்த இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம்” எனக் குறிப்பிட்டுள்ள செல்வப்பெருந்தகை, கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் எனக் கூறப்படும் கருத்துக்கும் பதிலளித்துள்ளார்.

“அறிவுஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர், வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையைத் தண்ணீர் ஊற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என உத்திரவாதம் தந்தாரா?

அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவுஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி, முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் முன்னணிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே.

அதுவும் வேண்டாம். நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம், நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி, அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: பெற்ற தாய் பற்றி பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.. வழக்கு பதிவு செய்தது சரிதான் – பிரேமலதா விஜயகாந்த்

மேலும், “பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால், அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே, அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும்போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும். காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால், ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.

பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது:

காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர்தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்றுகொண்டு, என் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.

உரக்கச் சொல்கிறேன். நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டது. கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் விஜய் இருப்பது ஏற்கப்பட்டாலும், 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us