தமிழகத்தில் தீவிரமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. “பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்”.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அறிவிப்பு
Tamilnadu Viral Fever Alert: தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சுவாச தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், மாநிலத்தில் இதுவரை 15,933 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 16: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாகப் பொதுமக்களிடையே காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சுவாச மண்டலத் தொற்றுப் பாதிப்புகள் வேகமாகப் பரவி வருகின்றன. பருவகாலத் தொற்றுகள் அதிகரிக்கும் இக்காலத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!
மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் ஆலோசனை
சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற புதிய மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாநிலத்தில் பரவி வரும் பருவக்காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளித்தார். மேலும், பொதுமக்கள் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டார்.
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்:
சுவாசப் பாதை சார்ந்த காய்ச்சல் மற்றும் தொற்றுகள் எளிதில் பரவும் தன்மை கொண்டவை என்பதால், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, பேருந்துகள், தொடர்வண்டிகள், சந்தைகள், திரையரங்குகள் மற்றும் மருத்துவமனை வளாகங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது வைரஸ் பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குக் காய்ச்சலா?
சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே இந்தத் தொற்று மிக விரைவாகப் பரவும் அபாயம் உள்ளது. எனவே, காய்ச்சல், சளி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளைப் பெற்றோர்கள் எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் வீட்டில் போதிய ஓய்வெடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தேவையான சிகிச்சைகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு.. யார்.. யார்.. இடம்பெற்றுள்ளனர்!
மாநிலத்தில் 15,933 பேருக்கு டெங்கு:
மழைக்காலத்தையொட்டி கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அமைச்சர், இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும் தேங்கி நிற்கும் தூய்மையான தண்ணீரை உடனுக்குடன் அகற்றி, கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.