சினிமா பட பாணியில் அமரர் ஊர்தியில் வந்து ஏடிஎம் கொள்ளை.. வடமாநில கும்பலை சேர்ந்த 3 பேரை தட்டித்தூக்கிய தனிப்படை போலீசார்!!
Tiruvallur ATM Robbery: திருவள்ளூர் அருகே அமரர் ஊர்தி வாகனத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்களை வெள்ளவேடு தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர், செப்டம்பர் 16: திருவள்ளூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் அமரர் ஊர்தி வாகனத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்ற வினோத சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. மக்கள் நடமாட்டம் மற்றும் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் நெடுஞ்சாலைப் பகுதியில் துணிச்சலாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம், காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்த வெள்ளவேடு தனிப்படை போலீசார், தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்களைக் கைது செய்து சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிக்க: சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!
சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்:
திருவள்ளூர் அருகே பூந்தமல்லி – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் கூடப்பாக்கம் மேட்டு கண்டிகை பகுதியில் ஒரு தனியார் ஏடிஎம் சேவை மையம் இயங்கி வந்தது. கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில் இங்கு நுழைந்த மர்மக் கும்பல், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே அப்ரோச் செய்து தூக்கிச் சென்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாகனம் தான் காவல் துறையினரையே வியப்பில் ஆழ்த்தியது. மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள ஒரு மயானப் பகுதியிலிருந்து திருடப்பட்ட அமரர் ஊர்தி வாகனத்தை எடுத்து வந்து, அதில் இந்த ஏடிஎம் இயந்திரத்தைச் ஏற்றித் தப்பிச் சென்றுள்ளனர்.
சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையர்கள்:
அமரர் ஊர்தியைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்த இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. கொள்ளைச் சம்பவம் நடந்த கூடப்பாக்கம் பகுதி முதல் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா பதிவுகளைத் தனிப்படை போலீசார் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் கிடைத்த முக்கிய தடயங்களை வைத்து, வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை வெள்ளவேடு போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மேவாட் கும்பலா? காவல் துறை தீவிர விசாரணை:
கைது செய்யப்பட்ட 3 கொள்ளையர்களிடமும் வெள்ளவேடு போலீசார் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு முன்பாகவே அப்பகுதியைச் சுற்றிப் பார்த்து, நோட்டமிட்டுத் தான் இந்தக் கொள்ளையை மிகத் துல்லியமாக அரங்கேற்றியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் முழுமையான விவரங்களைக் காவல் துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த பிரபல ‘மேவாட்’ கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் புதிய கும்பலா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். அத்துடன், இப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், தலைமறைவாக உள்ள மற்ற கூட்டாளிகளைப் பிடிக்கவும் காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.