“ஆதரவு தொடர்ந்தாலும்.. தவெகவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடில்லை”.. சிபிஎம் பகிரங்க அறிவிப்பு!!
CPM Shanmugam Remarks on TVK Support: "தவெக ஆட்சி அமைக்க மட்டுமே இடதுசாரிகள் ஆதரவு அளித்துள்ளோம். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக அர்த்தமில்லை" என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். உடன்படும் விஷயங்களை வரவேற்போம், மாறுபடும் விஷயங்களில் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை, செப்டம்பர் 16: தமிழக அரசியலில் நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி கட்சிகள் வழங்கி வரும் ஆதரவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக அரசு அமைக்க மட்டுமே சிபிஎம் ஆதரவு அளித்துள்ளதே தவிர, அந்த அரசு மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிப்பதாகவோ அல்லது பொறுப்பேற்பதாகவோ அர்த்தமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தவெக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், தவறுகளை சுட்டிக்காட்டும் தங்களின் இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு.. தன்னிச்சையாக உயர்த்திய உரிமையாளர்கள்.. பயணிகள் அதிர்ச்சி!
ஆட்சி அமைக்க ஆதரவே தவிர அனைத்துக்கும் அல்ல:
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், தவெக ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே இடதுசாரிகள் தங்களது ஆதரவை வழங்கியிருப்பதாகத் தெளிவுபடுத்தினார். ஒருவேளை இந்த ஆதரவு நிலையில் ஏதேனும் வேறுவிதமான முடிவுகள் எடுக்கப்பட்டால், நாட்டில் ஏற்படும் அரசியல் குழப்பத்தையும் சிக்கல்களையும் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி (BJP) மீண்டும் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் வாய்ப்பு உருவாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு தொடர்கிறது என குறிப்பிட்ட அவர், இதற்காக தவெக அரசு எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் சிபிஎம் பொறுப்பேற்காது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
120 நாள் ஆட்சியில் மாறுபட்ட கருத்துக்கள்:
தவெக அரசின் கடந்த 120 நாள் ஆட்சிக் காலத்தில், பல முக்கிய மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் இடதுசாரி கட்சிகள் தங்களது மாறுபட்ட கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளன. அரசின் தவறான நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் குறித்து அவ்வப்போது அறிக்கைகள் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் சிபிஎம் தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு மிகத் தெளிவாகக் தெளிவுபடுத்தியிருப்பதாக பெ. சண்முகம் தெரிவித்தார்.
இதையும் படிக்க : டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு டிஜிட்டல் மயம்: ஒரிஜினல் பெற என்ன செய்ய வேண்டும்?
எதிர்காலத்திலும் தொடரும் பகிரங்க எதிர்ப்பு:
மக்கள் நலன் சார்ந்த மற்றும் கொள்கை ரீதியாக உடன்படக்கூடிய விஷயங்களில் தவெக அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதில் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதே வேளையில் தவறு நடக்கும் இடங்களில் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்கப்போவதில்லை என்றும் உறுதியளித்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதும், தவறு இழைக்கும் போது அதைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பதும் தான் ஒரு முற்போக்குக் கட்சியின் கடமை என்றும், இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.